2015-10-27 15:15:00

பிள்ளைகளுடன் “நேரத்தை வீணாக்குவது” பெற்றோருக்கு முக்கியம்


அக்.27,2015. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடன் “நேரத்தை வீணாக்குவது” எப்படி என அறிந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சுலோவாக்கிய கர்தினால் Ján Chryzostom Korec அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு, அந்நாட்டின் Bratislava பேராயர் Stanislav Zvolenský அவர்களுக்கு தனது இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆர்வமுள்ள மற்றும் மனத்தாராளம் நிறைந்த மேய்ப்பரான கர்தினால் Korec அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள நீண்டகால மேய்ப்புப் பணியில் நற்செய்திக்கு அச்சமின்றி சான்று பகர்ந்தவர் என்றும், மனித உரிமைகளையும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் பாதுகாப்பதில் துணிச்சலுடன் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுலோவாக்கிய குடியரசு, முன்னாள் செக்கோஸ்லாவாக்கியாவின் ஓர் அங்கமாக  இருந்த சமயம், சோவியத் கம்யூனிச ஆட்சியில் கர்தினால் Korec அவர்கள் சிறையில் இருந்தவர் என்றும், இவர் பல ஆண்டுகள் தனது ஆயர் பணியை ஆற்ற இயலாமல் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், இறைபராமரிப்புக்கும், திருத்தந்தைக்கும் விசுவாசமாக இருந்ததில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தார் என்றும் திருத்தந்தையின் தந்திச் செய்தி கூறுகிறது.

சுலோவாக்கிய நாட்டின் Nitraவில் இம்மாதம் 24ம் தேதி மாலை இறந்த, 91 வயது நிரம்பிய இயேசு சபை கர்தினால் Korec அவர்கள், Nitra மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயராவார். இவர், முன்னாள் சோவியத் கம்யூனிச ஆட்சியின்போது, மறைவாக, ஏறக்குறைய 120 அருள்பணியாளர்களுக்கு அருள்பொழிவு செய்துள்ளார். இவரின் அடக்கச்சடங்கு அக்டோபர் 31, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.