2015-10-27 15:38:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் உதவி


அக்.27,2015. பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது கவலைகொண்டுள்ள அதேவேளை, இக்குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உடனடி உதவிகளைச் செய்வதற்கு தலத்திருஅவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் அறிவித்தார்.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தானில் குறைந்தது 230 பேரும், ஆப்கானிஸ்தானில் 300க்கும் மேற்பட்டவர்களும்  இறந்துள்ளனர் மற்றும் 1,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும்வேளை, இவ்வெண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பிலிருந்து இரு அவசரகாலப் பணிக் குழுக்கள்  பேஷ்வார், இஸ்லாமாபாத் உட்பட நிலநடுக்கப் பாதிப்புப் பகுதிகளுக்குச் ஏற்கனவே சென்றுள்ளதாகவும் கூறினார் காரித்தாஸ் இயக்குனர் Amjad Gulzar.

வட இந்தியாவின் சில பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்க அதிர்வை உணர்ந்தனர் என்றும், இந்தியா காரித்தாஸ் நிறுவனம், இவ்வாரத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு மற்றும் பேரிடர் கால முன்தயாரிப்புப் பயிற்சிகளை வழங்கியது என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.