2015-10-27 15:49:00

செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு


அக்.27,2015. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவில், வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது உலக திருநற்கருணை மாநாடு குறித்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர் திருஅவைத் தலைவர்கள்.

செபு பேராயர் ஹோசோ பால்மா, உலக திருநற்கருணை மாநாடுகள் பணிக்குழுத் தலைவர் பேராயர் பியெரோ மரினி, இப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி வித்தோரே பொக்கார்தி ஆகிய மூவரும் 51வது உலக திருநற்கருணை மாநாடு பற்றி விளக்கினர்.

பிலிப்பைன்சில், குறிப்பாக, செபு உயர்மறைமாவட்டத்தில் ஒரு வாரம் கொண்டாடப்படும் திருக்குழந்தை விழாவின் முடிவிலும், பிலிப்பைன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக்குத் தயாரிப்பாகவும் திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்தார் செபு பேராயர் பால்மா.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஆசியக் கண்டம் அண்மை ஆண்டுகளில் உலகின் பெரிய கருவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது, அதேசமயம், அக்கண்டத்தில் இன்னும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார் பேராயர் பால்மா.

பிலிப்பைன்சில் இம்மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் மற்றும் “உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே, மகிமையின் நம்பிக்கை”(கொலோ.1:27) என்ற இம்மாநாட்டின் தலைப்பு பற்றியும் விளக்கினார் பேராயர் பால்மா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.