2015-10-27 15:42:00

காலநிலையில் உண்மையான மாற்றம் கொணர ஆயர்கள் வேண்டுகோள்


அக்.27,2015. இவ்வாண்டில் பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில், நியாயமான, சட்டமுறைப்படி இயங்கவைக்கும் மற்றும் உண்மையான மாற்றம் ஏற்படும் ஒப்பந்தங்கள் கொண்டுவரப்படுமாறு, கர்தினால்கள், முதுபெரும் தந்தையர் மற்றும் ஆயர்கள் இணைந்து உலக அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா, அமெரிக்கா என அனைத்துக் கண்டங்களின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் இணைந்து உலக அரசுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்திங்களன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு இதனை வெளியிட்டார்.

இந்த அறிக்கை குறித்து பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடலுக்குப் பதில் அளிப்பதாகவும், உலகின் அனைத்து மக்கள் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்த அறிக்கை உள்ளது என்று கூறினார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை கவனத்துடனும், விவேகத்துடனும் நாம் பராமரிக்காவிட்டால், நாம் எல்லாரும் ஒரு பேரிடரை நோக்கிச் செல்ல நேரிடும்  என்றும் எச்சரித்தார் கர்தினால் கிரேசியஸ்.    

மேலும், இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, ஓசியானிய ஆயர் பேரவை  கூட்டமைப்பின் தலைவரான பாப்புவா நியு கினி பேராயர் John Ribat அவர்கள், தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வு அச்சுறுத்தலில் உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.