2015-10-26 15:10:00

வாரம் ஓர் அலசல் – இது கருணையின் காலம்


அக்.26,2015. அன்பு நெஞ்சங்களே, இஞ்ஞாயிறன்று ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நம் கவனத்தை ஈர்த்தன. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் அவர்களை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்காக நடத்திய போரே தற்போதைய ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் உதயத்துக்கு காரணம் என்ற கூற்றில் உண்மையும் இருப்பதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் அவர்கள் கூறியுள்ளார். CNN ஒளிபரப்பாளர்களுக்கு வழங்கிய பேட்டியில், ஈராக் விவகாரத்தில் செய்யாமல் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் பிளேர். இவர் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் கொடுஞ்செயல்களால், ஈராக், சிரியா போன்ற நாடுகளிலிருந்து எண்ணற்ற மக்கள் கட்டாயமாக வெளியேறி வருகின்றனர். பங்களாதேஷில் கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலுக்கு தாங்களே காரணம் என்று ஐ.எஸ். அரசு ஏற்றுள்ளது. இவ்வன்முறைக்கு அஞ்சி ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரச்சனை குறித்து இஞ்ஞாயிறன்று பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினர். ஆனால் கிரேக்க நாடு இதில் கலந்து கொள்ளவில்லை. இதில் கலந்து கொள்ளாதது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த கிரேக்க பிரதமர் Alexis Tsipras அவர்கள், இந்த மக்கள் செல்வதற்குப் பாதையாக உள்ள நாடுகள் மத்தியில் இக்கூட்டம் நடந்தது, ஆனால், இந்தப் பாதைகளின் முடிவில் ஒரு நுழைவாயில் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார். சிரியா மற்றும் ஆப்கானைச் சேர்ந்த மக்கள், துருக்கி கடற்பரப்பு வழியாக கிரேக்க நாட்டு Lesbos தீவுக்கு ஒரு நாளில் ஒரு சில மணி நேரங்களிலேயே 2,500க்கும் மேற்பட்டோர் வந்திறங்கியுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கிரேக்கத்தைச் சென்றடைந்தனர் என்று உலக குடிபெயர்வோர் நிறுவனம் கூறியுள்ளது.   

இவ்வாண்டில் இதுவரை 6 இலட்சத்து 44 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிபெயர்ந்த மற்றும் அகதிகள், கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் வந்துள்ளனர், இவர்களில் ஏறக்குறைய 34 விழுக்காட்டினர் பெண்களும், சிறாரும். இவர்கள் ஐரோப்பிய கடற்கரைக்குப் பகுதிக்கு வருமுன்னரே பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாகின்றனர், இம்மக்கள் பெருமளவாகக் கூடியிருக்கும் இரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்களில் இவர்கள் மனித வர்த்தகர்களால் பயன்படுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் புலம்பெயர்வோர் நிறுவனத்தின்(UNHCR) அலுவலகர் Melissa Fleming அவர்கள், கடந்த வெள்ளியன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். போர்கள் இடம்பெறும் நாடுகளிலிருந்து துருக்கி செல்லும் இம்மக்கள், கிரேக்கத்தின் ஏதென்ஸ் வழியாக செர்பியா, குரோவேஷியா, சுலோவேனியா,ஆஸ்ட்ரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றனர். வழியில் சில நாடுகள் எல்லைகளை மூடிவிட்டன, தடுப்பு வேலிகளும் அமைத்துள்ளன. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த எட்டு இலட்சம் புலம்பெயர்ந்த மக்கள் இவ்வாண்டில் ஜெர்மனியில் புகலிடம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.     

அன்பு நெஞ்சங்களே, புலம்பெயர்ந்த மக்கள் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது ஐரோப்பா. இவ்வேளையில், இஞ்ஞாயிறன்று குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர் மாமன்றத்தை நிறைவு செய்த திருப்பலியில், ஐரோப்பாவுக்குள் புகலிடம் தேடும் இம்மக்களோடு கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது, துன்பங்கள் மற்றும் சண்டைகள் இடம்பெறும் நேரங்கள், இறைவன் தமது கருணையை வெளிப்படுத்துவதற்கான காலங்களாக உள்ளன, இக்காலம், இரக்கத்தின் காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் திருப்பயணிகளிடம்,  தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேறும் குடும்பங்கள் பற்றியும் பேசினார் திருத்தந்தை.

மாமன்றம் என்பது சேர்ந்து நடப்பது, இந்த ஆயர்கள் மாமன்றத்தில், பயணம் செய்யும் திருஅவையின் அனுபவத்தில், சிறப்பாக, உலகெங்கும் சிதறியுள்ள குடும்பங்களோடு பயணம் மேற்கொண்டோம். இப்படி புலம்பெயரும் இறைமக்கள், குடும்பங்களால் ஆனவர்கள். இம்மக்களில் ஏழைகளும் வாய்ப்பிழந்தவர்களும் இல்லாமல் இல்லை. ஐரோப்பாவின் சாலைகள் வழியாகச் செல்லும் இவர்கள் நம் காலத்தின் உண்மைத் துன்பயியல் நிலைமைகள். தங்களின் சொந்த இடங்களை விட்டு வேரோடு பெயர்க்கப்பட்ட இக்குடும்பங்கள், இந்த மாமன்றத்தில் நம் செபங்களிலும், நம் பகிர்வுகளிலும் இடம்பெற்றிருந்தன. மேலும், இச்சனிக்கிழமை மாலையில், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக ஆற்றிய உரையிலும், திருஅவையின் முதல் கடமை யாரையும் கண்டனம் செய்யாமல், இறைவனின் கருணையை அறிவிப்பதாகும், அனைவரையும், மனமாற்றத்திற்கும், நம் ஆண்டவரில் மீட்புக்கும் அழைப்பதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவையின் பணி, மக்கள்மீது இறைவன் கொண்டிருக்கும் கருணையை அறிவிப்பதாகும். அப்பணியை ஆற்றிக்கொண்டும் வருகிறது. நம் சமூகங்களிலும் கருணைச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா முழுவதும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுநீரகங்கள், இதயங்கள் போன்ற உடல் உறுப்புகள் நோயாளிகளுக்கு தேவைப்படுகின்றன. உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் சிறந்து விளங்குவது பாராட்டுக்குரியது என, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஞ்ஞாயிறன்று வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். தமிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில், 685 பேரின் உடல் உறுப்புகள் தானங்களாகப் பெற்றதன் மூலம், 3,775 பேர் பயன் பெற்றுள்ளனர்.

அன்பு நெஞ்சங்களே, கருணைச் செயல்கள் ஆற்றுவதற்கு வயதோ, உடல் நிலையோ ஒரு தடையல்ல. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் நிற்கிறார் போலியோ நோயாளி இந்திரா. பிறந்த ஆறு மாதத்திலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இந்திராவுக்கு, இருகால்களும் செயலிழந்ததால் இவரது பெற்றோரின் முழுக்கவனமும் இவரது கால்கள் மீதுதான் இருந்ததே தவிர இவரது கல்வி மீது இருக்கவில்லை. அதனால் பதினான்கு வயது வரை இவர் பள்ளிக்கூடம் அருகில் மழைக்குக்கூட ஒதுங்கவில்லை. பதினான்கு வயதுக்கு பின்பு பள்ளிக்குச் சென்று பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று தேறி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்து, சிறப்புக் கல்வியில் B.Ed. படிப்பும் முடித்தார். படிப்பையும், திறமையையும் உணர்ந்து நல்ல வேலை வாய்ப்பு இவரைத் தேடி வர, ‘வேலை வேண்டாம், என்னைப் போன்றவர்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்யப் போகிறேன் என்று சேவைக்களத்தில் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்திரா. இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

போலியோ என்னை மிகவும் பாதித்து விட்டது. எனக்குத் தேவையான பிசியோதெரபி சிகிச்சைக்காக என்னை ‘மித்ரா’என்ற மையத்தில் சேர்த்தார்கள். அங்கு எனக்கு பிசியோதெரபி பயிற்சி அளிக்க வந்த செல்வின்ராய் அவர்கள். என்மீது கூடுதல் கவனம் செலுத்தினார். நான் எப்போதும் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பேன். அதை பார்த்தவர், ‘நீ புத்தகத்தை எடுத்து படிப்பதை நான் பார்த்ததில்லையே?’ என்று கேட்டார். அப்போதுதான் அவருக்கு நான் பள்ளிக்கூடத்துக்கே செல்லாமல் இருப்பது தெரிந்தது. அப்போது எனக்கு 14 வயது. அதனால் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் எனக்குப் பயிற்சி வழங்கிய ஆசிரியர் ஒருவர் கொடுத்த சான்றிதழ் நான் 8ம் வகுப்பில் சேருவதற்கு உதவிக்கரமாக இருந்தது. என்னால் நடக்க இயலாது என்பதால் தினமும் செல்வின் ராய், என்னை பள்ளிக்குத் தூக்கி சென்று மீண்டும் அழைத்து வருவார். நானும் அதிகக் கவனம் செலுத்தி படித்தேன். நான் நான்கு வயது வரையில்தான் பெற்றோருடன் வீட்டில் வாழ்ந்து வந்தேன். பின்னர் குழந்தைகள் மையத்தில்தான் வளர்ந்தேன். என்னைப் போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு என் படிப்பு மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எம்.சி.ஏ. முடித்தவுடன் கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலை தேடி வந்தது. வேலைக்குச் சென்று சம்பாதித்து அந்தப் பணத்தில் உதவி செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் பள்ளிப் படிப்பில் சேருவதற்கு முன்பாக பல ஆண்டுகள் மனநலம் குன்றிய குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் பயிற்சி படிப்பைக் கற்றேன்.  

என்று கூறியுள்ள முப்பது வயது நிரம்பிய இந்திரா, தன்னை வளர்த்து ஆளாக்கிய பிரேம வாசம் மனவளர்ச்சி குன்றிய, ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகள் இல்லச் சேவை பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார். அந்த இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதுடன் அவர்களைப் பராமரிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். சக்கர நாற்காலியில் உலா வரும் அவரைப் பார்த்தாலே குழந்தைகள் ஓடி வந்து பாசமழை பொழிகிறார்கள் என்று அப்பேட்டியின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, இக்காலம், கருணையின் காலம். நம் கருணைச் செயல்கள் பலருக்குத் தேவைப்படுகின்றன. கருணையின் வடிவங்களாய், கருணைக்கு முன்னோடியாய் விளங்குவோம். இறைவா, இவ்வுலகில் பகைமையும் வெறுப்பும் அழிந்திட வேண்டும், பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திட வேண்டும், நிம்மதி வாழ்வில் நிறைந்திட வேண்டும், இதயங்களில் இரக்கம் வேண்டும், இன்னல்களில் உதவ வேண்டும், வறுமையும் பிணிகளும் ஒழிந்திட வேண்டும், தீமையின் வேர்கள் அழிந்திட வேண்டும், நன்மைகளின் பாதைகள் தெரிந்திட வேண்டும், போர்களில்லாத பூமி வேண்டும், அன்புலகம் மலர வேண்டும் என்று செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.