2015-10-26 16:18:00

திருஅவையில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன


அக்.26,2015. மாமன்றம் என்ற பொருள்தரும் 'சினட்' (Synod) என்ற வார்த்தைக்கு, 'இணைந்து நடப்பது' என்று பொருள்; திருப்பயணியான திருஅவை என்ற அனுபவத்தையே நாம் ஆயர்கள் பொது மாமன்றத்தின்போது மேற்கொண்டோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களாக, வத்திக்கானில் நடைபெற்ற 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய  நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வுலகில் பயணிக்கும் திருஅவை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருப்பயணியான திருஅவையில், உலகெங்கும் சிதறுண்டிருக்கும் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், பல சவால்களுக்கு இடையே, கடினமாக உழைத்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த மாமன்றத்தை, தூய ஆவியார் வழி நடத்தியதற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

"மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும், பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெருங்கூட்டமாய் அவர்கள் இங்கு திரும்பி வருவர்" என்று இறைவாக்கினர் எரேமியா கூறிய வார்த்தைகளை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இறைமக்கள் என்ற சமுதாயத்திலிருந்து யாரும் விலக்கிவைக்கப் படுவதில்லை என்ற கருத்தை வலியுறுத்தினார்.

ஐரோப்பிய நாடுகளின் சாலைகளில் துன்புறும் புலம்பெயர்ந்தோரை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மக்களை, திருஅவை திக்கற்றவர்களாய் விடாது என்பதையும், நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.