2015-10-26 15:51:00

இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை


அக்.26,2015. போர்களால் உருவாகும் வேதனைகளைக் குறைப்பதை மனதில் கொண்டு பணியாற்றும் இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்கள், தங்களுக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்து, ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இராணுவ வீரர்களிடையே பணியாற்றும் கத்தோலிக்க ஆன்மீக அருள்பணியாளர்களின் பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதைத் தடுத்து, மனித மாண்பை பாதுகாக்கும் சவால்களை அனைவரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.

போர்க்களத்தில் வாழ்ந்து, அதன்வழியே ஆன்மீகக் காயங்களைப் பெற்றுள்ள இராணுவ வீரர்களை எவ்விதம் குணமாக்குவது என்பது முக்கியம் என்று அருள்பணியாளர்களிடம் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்புக் கவனத்துடன் மேய்ப்புப்பணி ஆற்றவேண்டியது அவசியம் என்று எடுத்துரைத்தார்.

அப்பாவி பொதுமக்கள், சுற்றுச்சூழல், கலாச்சாரப் பாரம்பரியத் தலங்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் மனிதாபிமானமுள்ள சட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

திருப்பீட நீதி அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமிற்கு, திருப்பீடத்தின் ஆயர் பேராயம், மற்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஆகியவை இணைந்து ஆதரவு வழங்கியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.