2015-10-24 15:51:00

மத்திய கிழக்கில் அமைதி கட்டாயத்தினால் வருவதல்ல


அக்.24,2015.உலகின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் உக்ரேய்ன் பகுதிகளில் வன்முறைச் சூழல்களில் வாழும் குடும்பங்கள் குறித்து கவலை தெரிவித்து, 14வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இவ்வுலக ஆயர்கள் மாமன்றப் பொது அமர்வுகளின் நிறைவு நாளான இச்சனிக்கிழமையன்று மான்றத் தந்தையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில், இரத்தம் தோய்ந்த கலவரங்கள் மத்தியில் ஆண்டுக்கணக்காய் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலை கடந்த சில மாதங்களிலும், வாரங்களிலும் கடுமையாகி உள்ளது என்று கூறியுள்ளனர்.

ஜோர்டன், லெபனான், துருக்கி இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் புலம்பெயரும் மக்களை ஏற்றுள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இப்பிரச்சனைக்கான தீர்வை, தூதரக, உரையாடல் மற்றும் அனைத்துலக சட்டத்தை மதிப்பதன் வழியாக காணப்படுமாறும் மாமன்றத் தந்தையர் வலியுறுத்தியுள்ளனர்.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து, மத்திய கிழக்கில் வாழும் அனைத்து முதுபெரும் தந்தையர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருக்கு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர் மான்றத்தந்தையர்.

சிரியா, ஈராக், எருசலேம் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படக் கூடியவையே, யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மதத்தவர்கள், ஒருவர் ஒருவரை உடன்பிறந்தோராக மதித்து அன்புகூர்ந்து, ஆபிரகாமின் புதல்வர்கள் மத்தியில் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்குச் சான்று பகருமாறும் கேட்டுள்ளனர் மான்றத்தந்தையர்.

மத்திய கிழக்கில் அமைதி கட்டாயப்படுத்தி வருவதல்ல, ஆனால் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தையும், சமயத்தையும் மதிப்பதற்கு அரசியல் முறையாகத் தீர்மானிப்பதிலே அமைதி ஏற்படும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.