2015-10-24 15:57:00

பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மனித முகம் தேவைப்படுகின்றது


அக்.24,2015. “பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மனித முகம் தேவைப்படுகின்றது, அதனால் சமுதாயத்தில் எவரும் ஒதுக்கப்பட மாட்டார்கள்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு திருப்பலி நிறைவேற்றி குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்” என்ற தலைப்பில், இம்மாதம் 4ம் தேதி தொடங்கிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையருடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி இம்மான்றத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 14வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து இச்சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இம்மான்றத்தின் இறுதித் தொகுப்புக்கு 1300க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வந்தன, 94 பத்திகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த இறுதித் தொகுப்புக்கு 270 மாமன்றத்தந்தையர் ஒவ்வொரு பத்தியாக இச்சனிக்கிழமை மாலை அமர்வில் ஓட்டளிக்கின்றனர் என்று அறிவித்தார். இவ்வுலக ஆயர்கள் மாமன்றத்தில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அனைத்துலக அளவில் கூட்டமைப்பு அவசியம் என்று, கிரேக்க மெல்கிதே முதுபெரும் தந்தை கிரகரி 3ம் லஹாம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.