2015-10-24 16:22:00

கியூபாவில் முழு சமய சுதந்திரத்திற்கு வேண்டுகோள்


அக்.24,2015. கியூபாவில் எல்லா சமய நிறுவனங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக அகற்றப்பட்டு அவை சுதந்திரமாகப் பணிகள் ஆற்றுவதற்கு அரசு ஆவன செய்யுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கர் கேட்டுள்ளனர்.

ஹவானா உயர்மறைமாவட்டத்தின் Palabra Nueva இதழின் ஆசிரியர் பக்கத்தில் இவ்வாறு கியூப கம்யூனிச அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, சமய சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தைவிட மேலானது என்றும் கூறியுள்ளது.

2003ம் ஆண்டில் கியூப அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கத்தோலிக்க திருஅவை இடைநிலை வகித்தது, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் கியூபா அரசியல் உறவை உருவாக்குவதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கு உட்பட, கியூபாவில் கத்தோலிக்க திருஅவையின் செயல்பாடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது அவ்விதழ்.  

1998ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் கியூபா நாட்டுக்கான முதல் திருத்தூதுப் பயணம் உட்பட அந்நாட்டுக்கு மூன்று திருத்தந்தையர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களின் முக்கியத்துவம் பற்றியும் இவ்விதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.