2015-10-24 16:45:00

கடுகு சிறுத்தாலும் – கண்களால் காண்பது மட்டும் பார்வையல்ல


மருத்துவமனை ஒன்றில் இருவர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள். இருவரும் ஏறக்குறைய படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். இவ்விருவரில் ஒருவருடைய படுக்கை ஜன்னலுக்கு அருகில் இருந்தது. அவர் ஒவ்வொரு நாள் மதியமும் மிகவும் சிரமப்பட்டு தன் படுக்கையில் எழுந்து ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும் ஜன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று அவர் வர்ணனை ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர் அந்த ஒரு மணி நேரம் கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக வெளி உலகத்தைப் பார்த்தார்.

இது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, ஜன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்திய இரவு தூக்கத்திலேயே அமைதியாக அவர் இறந்து போனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே அவர் தந்த வர்ணனை வழியே தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம் இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று இன்னும் அதிக வருத்தம்.

இரு நாட்கள் சென்றபின், அந்த ஜன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார். மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்." என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். ஜன்னல் வழியே வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை.. ஒன்றும் இல்லை. அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த நர்ஸ் அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி, இந்த படுக்கையில் இருந்தவர் ஜன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர் அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது என்று நர்ஸ் சொன்னது அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும் ஓர் அழகான உலகைப் பார்க்க கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.