2015-10-24 16:31:00

ஐ.நா.வின் உயர்ந்த கொள்கைகளைச் செயல்படுத்த அழைப்பு


அக்.24,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர்ந்த கொள்கைகள் உலகினர் அனைவராலும் வாழ்ந்து காட்டப்படவும், அனைவருக்கும் ஏற்ற நல்லதோர் உலகத்தை அமைக்கவும், தனிப்பட்ட முறையிலும், சமூகமாகவும் மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட ஐ.நா. தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், தூதரக அதிகாரிகள் சந்திக்கும் இடமாக மட்டுமல்லாமல், அமைதிகாப்பவர், ஆயுதங்கள் களையப்பட போராடுபவர், மருந்துகளை விநியோகிக்கும் நலப்பணியாளர், புலம்பெயர்வோர்க்கு நிவாரணப் பணியாற்றும் குழு, நீதி வழஹ்கப்பட உதவும் மனித உரிமைகள் வல்லுனர் என்று இந்நிறுவனம் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது என்றும் கூறினார் ஐ.நா.பொதுச் செயலர்.

ஐ.நா. தனது உலகளாவியப் பணியை ஆற்றுவற்கு எண்ணற்ற நம்பர்களையும், ஆதரவாளர்களையும் சார்ந்து இருக்கின்றது என்றும், ஏழ்மை ஒழிப்பு, நாடுகளில் சனநாயகத்தை நிலைநாட்டல் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் 2015ம் ஆண்டுக்குப் பின்னான மில்லேன்ய இலக்குகளை நிறைவேற்ற அனைவரும் உதவுமாறும் கேட்டுள்ளார் பான் கி மூன்.

1945ம் ஆண்டில் ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவு இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது. இதனையொட்டி உலகின் ஏறக்குறைய 300 நகரங்களில் கட்டடங்கள் நீல நிறத்தில் சுடர்விட்டன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.