2015-10-23 16:43:00

மாமன்றத்தின் இறுதி அறிக்கைக்கு 700க்கு மேற்பட்ட பரிந்துரைகள்


அக்.23,2015. குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு, திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பத்துப் பேர் அடங்கிய சிறப்பு குழுவால் அந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுவரும் முறைகள் குறித்து இவ்வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கப்பட்டது.

அந்த இறுதி தொகுப்பு தயாரிக்கப்பட்டுவரும் முறைகள் குறித்து விளக்கிய, இச்சிறப்பு குழுவில் ஒருவரான மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இந்த இறுதி அறிக்கைக்கு, 700 முதல் 800 வரையிலான பரிந்துரைகள் வந்தன, அவற்றை வல்லுனர்கள் குழு ஆராய்ந்து தலைப்பு வாரியாகப் பிரித்து வழங்கினர் என்று அறிவித்தார். மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த அறிக்கை மாமன்றத்தின் பலமொழி குழுவுக்கு அனுப்பப்பட்டது, இக்குழு தயாரித்த தொகுப்பை, சிறப்புக்குழு ஆய்வு செய்து ஒரே மனதாக ஏற்றது என்றும் விளக்கினார் கர்தினால் கிரேசியஸ்.

மாமன்றத்தின் சில சிறிய குழுக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், நூறு பக்கங்கள் கொண்ட இந்த இறுதி அறிக்கை முன்னுரையோடு தொடங்கும் என்றும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் எழுப்பப்பட்ட அனைத்து விவகாரங்களுமே இதில் சேர்க்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்க பல்வேறு மேய்ப்புப்பணி வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் விளக்கினார் கர்தினால் கிரேசியஸ்.

இந்த அறிக்கை திருஅவை கோட்பாடுகளை மாற்றவில்லை என்றும், இதனை திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பதாகவும், அவரின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாகவும் அறிவித்தார் கர்தினால் கிரேசியஸ்.

மேலும், இவ்வியாழன் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பில், கர்தினால்கள் அவையில் மிகவும் இளையவரான Tonga ஆயர் கர்தினால் Soane Patita Mafi, லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் José Horacio Gómez ஆகிய மூவரும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.