2015-10-23 16:51:00

மதங்கள், கலாச்சாரங்களை,தீவிரவாதிகள் அழிக்க முயற்சிக்கின்றனர்


அக்.23,2015. பல்லாயிரமாண்டுகளாக மத்திய கிழக்கில் வேரூன்றியுள்ள மதங்கள், இனக் குழுக்கள் மற்றும் கலாச்சாரங்களை அழிப்பதற்குரிய வழிகளைத் தீவிரவாதிகள் தேடி வருகின்றனர் என்பதை உலக சமுதாயத்திற்கு நினைவுபடுத்த வேண்டிய முக்கிய கடமையை திருப்பீடம் கொண்டிருக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில், மத்திய கிழக்கின் நிலைமைகள் குறித்து இவ்வியாழனன்று இடம்பெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இடம்பெறும் அறிவற்ற வன்முறைகளில் இறப்பவர்களை நாம் கணக்கிடும்போது, அவற்றில் காயமடைந்தவர்கள், கடும் ஆபத்துக்களுக்கு அஞ்சி தொடர்ந்து புலம்பெயர்பவர்கள் ஆகியோரின் நெருக்கடி நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று கூறிய பேராயர் அவ்சா அவர்கள், இப்பகுதியில் வன்முறையில் ஈடுபவர்கள், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் மிக அடிப்படையான கூறுகளைக்கூட கடைப்பிடிப்பதில்லை என்றும் ஐ.நா.வில் தெரிவித்தார்.

ஊடகங்களில் நாம் பார்ப்பது போன்று, சிறிதளவு அமைதி மற்றும் பாதுகாப்புக்காக, ஐரோப்பியக் கண்டத்தில் புகலிடம் தேடும் குடிபெயரும் மக்களும், அகதிகளும் எப்போதுமே நல்லமுறையில் வரவேற்கப்படுவதில்லை என்றும் கூறினார் பேராயர் அவ்சா.

ஆலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள், மேய்ப்புப்பணி நிறுவனங்கள் வழியாக, கத்தோலிக்கத் திருஅவை, இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் சிறப்பாக ஆற்றிவருகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார் பேராயர் அவ்சா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.