2015-10-23 16:16:00

கடுகு சிறுத்தாலும்.. : பரிதாபங்கள் இங்கு வேண்டாம்


இரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றது. அங்கு ஒரு சிறுவன் டீ விற்றுக் கொண்டிருந்தான்.  அவன் வேலை செய்யும் கடையில் இருந்து டீயை வாங்கிக்கொண்டு ஓடி வந்து விற்பதும், பின் காசு பிரிப்பதும் என சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தான். படிக்கும் வயதில் இந்த வேலை செய்கிறானே என மனதிற்குச் சங்கடமாக இருந்தது. அவனிடம் நண்பர்கள் அனைவரும் டீ வாங்கி அருந்தியபின் காசைக் கொடுத்தான் முகுந்தன். மீதம் இரண்டு ரூபாய் தந்தான் அச்சிறுவன்.

‘நீயே வைத்துக்கொள் தம்பி, உனது டீ மிக அருமையாக இருந்தது’ என்றான் முகுந்தன். அதைத் திருப்பிக் கொடுத்த சிறுவன், ‘ரொம்ப நன்றி அண்ணே.… நீங்க மொதல்ல கொடுத்த காசு எனக்கு மேன்மேலும் உழைப்பைக் கொடுக்கும். ஆனால், இரண்டாவது முறையாக கொடுத்த காசு என் உழைப்பை கெடுக்கும்.... நான் உங்களுக்கு ஓசியில டீ கொடுத்தா வாங்கி அருந்துவீர்களா?’ எனக் கேட்டான்.

‘மாட்டேன் தம்பி. ஏன் கேக்குற?’ என்றான் முகுந்தன்.

‘அது போலத்தான்….,  நீங்க என் உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் போதும். உழைக்காமல் இருக்க ஊதியம் கொடுத்துவிடாதீர்கள். பகலில் படிக்கிறேன். மாலை வேளைகளில், மற்ற சிறுவர்களோடு விளையாடுவதைத் தியாகம் செய்து, ஒரு மூன்று மணிநேரம் வேலை செய்து, வீட்டுச் செலவுக்கு எங்க‌ அம்மாவுக்குக் கொடுப்பேன்.  இரவு கொஞ்ச நேரம் படித்துவிட்டுத் தூங்கப் போவேன்’ என்றான் அந்த சிறுவன்.

முதலில் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட முகுந்தன், அவனைக் குறித்துப் பெருமைப்பட்டது மட்டுமல்ல, இந்த வயதிலும் அப்பா சம்பாதித்த பணத்தில் வாழும் தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.