2015-10-22 17:09:00

மியான்மார் சமயத் தலைவர்களுக்கு யூனிசெப் பாராட்டு


அக்.22,2015. ஒவ்வொரு குழந்தையும் தனது முழுத் திறமையுடன் வளர்ந்து முன்னேறுவதற்கு இன்றியமையாத கூறுகளாய் அமைந்துள்ள சகிப்புத்தன்மையும், சமய சுதந்திரமும் காக்கப்படுவதற்கு மியான்மார் சமயத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்றுள்ளது யூனிசெப் நிறுவனம்.

மியான்மாரில் சமய சகிப்பற்ற தன்மை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டின் புத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் மதங்களின் தலைவர்கள் இணைந்து சகிப்புத்தன்மைக்கும், சமய சுதந்திரத்திற்கும் அழைப்பு விடுத்திருப்பது நல்ல அடையாளம் என்று மேலும் கூறியுள்ளது யூனிசெப் நிறுவனம்.

மியான்மார் சமயத் தலைவர்களைப் பாராட்டியுள்ள யூனிசெப் நிறுவனத்தின் மியான்மார் நாட்டுப் பிரதிநிதி Bertrand Bainvel அவர்கள், சிறாரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தங்கள் தங்கள் மதத்தவர் மத்தியில் நம்பிக்கையைப் பெறுவதிலும் சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார்.

மியான்மாரில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக வருகிற நவம்பர் 8ம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தென்-கிழக்கு ஆசிய நாடான மியான்மார் 1824ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டுவரை பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.