2015-10-22 16:44:00

குடும்பங்கள் திருஅவையோடு மறைப்பணியைப் பகிர்ந்து கொள்கின்றன


அக்.22,2015. வத்திக்கானில் நடைபெற்றுவரும் குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த இவ்வியாழன் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பில், மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், கர்தினால்கள் அவையில் மிகவும் இளையவரான Tonga ஆயர் கர்தினால் Soane Patita Mafi, லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் José Horacio Gómez ஆகிய மூவரும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

மேலும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் சிறு குழுக்களின் அறிக்கைகளில், குடும்பங்களின் மறைப்பணி அழைப்பு, திருமணத் தயாரிப்பு, குருத்துவப் பயிற்சி, திருமணத்தின் முறிவுபடாதன்மை, ஓரினச் சேர்க்கை மக்களுக்கும், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் வெளிப்படையாக உதவுதல், கலப்பு திருமணங்கள் பற்றிய நேர்மறை கண்ணோட்டம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கை வருகிற சனிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த இறுதி அறிக்கையை பொதுவில் வெளியிடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானிப்பார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறப்பட்டது.

மேலும், குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம் கதவுகளைத் திறந்து வைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் ஜெர்மனியின் München-Freising கர்தினால் Reinhard Marx.

கர்தினால் Marx, உருகுவாய் நாட்டின் Montevideo கர்தினால் Sturla Berhouet, அயர்லாந்தின் Armagh பேராயர் Eamon Martin ஆகிய மூவரும் இப்புதன் பிற்பகலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இம்மான்றத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுன், பத்திரிகையாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

14வது உலக ஆயர்கள் மாமன்றம், தான் கலந்துகொள்ளும் முதல் மாமன்றம் என்றும், பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதாகவும், பிரதிநிதிகளின் பலவகையான பகிர்வுகள் தன்னை மிகவும் தொட்டதாகவும், திருத்தந்தை தீர்மானிப்பதற்கு இப்பகிர்வுகள் உதவும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார் கர்தினால் Marx.

Montevideo கர்தினால் Sturla Berhouet அவர்கள் கூறுகையில், இன்னலான சூழல்களில் மக்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பது திருஅவையின் முக்கிய பணி என்று தான் உணர்வதாகத் தெரிவித்தார்.

Armagh பேராயர் Eamon Martin அவர்களும், தனக்கு இது முதல் மாமன்றம் என்றும், மிக உன்னத அனுபவமாக இது உள்ளது என்றும், பொதுவான நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் மீது கட்டப்படும் உண்மையான கூறை பிரதிநிதிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.