2015-10-22 09:50:00

கடுகு சிறுத்தாலும்–கடமையை ஆற்றாமல் உரிமையை எதிர்பார்க்கலாமா?


வசதி படைத்த இளைஞர் ஒருவர், பச்சை குத்துபவரிடம் சென்று, தனது இடது தோளில் நீலநிறத்தில் சிங்கத்தைப் பச்சை குத்துங்கள் என்று கேட்டார். பச்சை குத்துபவரும் ஊசியை எடுத்துக்கொண்டு தனது வேலையை ஆரம்பித்தார். சிறிது நேரத்திலேயே, ஐயோ வலிக்கிறது, நீங்கள் என்னைக் கொல்லுகிறீர்கள், இப்போது சிங்கத்தின் எந்தப் பகுதியை பச்சை குத்துகிறீர்கள் என்று கேட்டார். வால் என்று பதில் சொன்னதும், சரி, அதைவிட்டுவிட்டு மற்ற பகுதிகளைக் குத்துங்கள் என்றார் இளைஞர். அவரும் வேலையைத் தொடர்ந்தார். இளைஞர் மறுபடியும் வலியால் துடித்தார். ஐயோ, இப்போது எந்தப் பகுதி என்று கேட்க, காது என்றார் பச்சை குத்துபவர். சரி அதையும் விட்டுவிட்டு, மற்ற பகுதியை ஆரம்பியுங்கள் என்று கட்டளை போட்டார் இளைஞர். அவரும் சரி என்று, இளைஞரின் தோளின் அடுத்த பகுதியில் பச்சை குத்தத் தொடங்கினார். இப்போதும் சிறிது நேரத்திலே சிங்கத்தின் எந்தப் பகுதி என்று இளைஞர் கேட்க, வயிற்றுப் பகுதி என்றார் அவர். சரி இதையும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளைப் பச்சை குத்துங்கள் என்றார் இளைஞர். உடனே அவர், நான் என்ன கனவா காண்கிறேன், வாலோ, வயிறோ, காதோ இல்லாத சிங்கத்தைக் கடவுள் படைக்கவில்லையே என்று கோபத்துடன் ஊசியைத் தரையில் போட்டுவிட்டார். ஆம். வலிக்குமே என்று பயந்து, எப்படி வாலும், வயிறும், காதும் இல்லாத சிங்கத்தை பச்சை குத்திக்கொள்ள முடியாதோ, அதேபோல், நம் கடமைகளைச் செய்யாமல் நம் உரிமைகளை எதிர்பார்க்க முடியாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.