2015-10-22 16:53:00

ஒடிசா கிறிஸ்தவர்க்கு நீதி, உதவி கேட்டு பேராயர் திறந்த கடிதம்


அக்.22,2015. இறந்தவர்களை மாண்புடன் அடக்கம் செய்வதற்கு நிலம், சிறுபான்மையினரின் பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் நியமனம், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்டவர்க்கு நீதி போன்றவை உட்பட பல விடயங்களைக் குறிப்பிட்டு ஒடிசா மாநில முதலமைச்சருக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஒடிசா பேராயர் ஒருவர்.

கட்டாக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஏழு விடயங்களைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ள திறந்த கடிதத்தில், ஒடிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மையினரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

புவனேஸ்வரில் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள், இரண்டாவது பெரிய சமய சமூகமாக உள்ளனர். இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களுக்கு ஒரேயொரு கல்லறைத் தோட்டம் மட்டுமே இருக்கின்றது, அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் ஜார்க்கண்ட், சட்டீஸ்கார், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல கிறிஸ்தவர்கள் உள்ளனர், குடும்பங்களின்றி உள்ள இவர்கள் இறந்தால் நாம்தான் அவர்களைப் புதைக்க வேண்டும் என்று விளக்கியுள்ளார் பேராயர் பார்வா.

புதைப்பதற்கு இடமில்லாததால், ஒரே கல்லறையில் நான்கு பேரைப் புதைக்க வேண்டியிருக்கிறது, இது, நன்னெறிக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் பார்வா.

கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில், 56 ஆயிரம் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக வெளியேறினர், 415 கிராமங்கள் சூறையாடப்பட்டு, 5,600 வீடுகள் தீ வைக்கப்பட்டன, எனினும், 3,232 புகார்கள் காவல்துறையில் சமர்ப்பிக்கப்பட்டன, ஆனால் 825 புகார்களே இதுவரை விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன என்றும் பேராயர் தனது திறந்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.