2015-10-21 17:48:00

தீர்மானம் எடுக்கும் நடைமுறைகளில் சமத்துவநிலை அவசியம்


அக்.21,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை உட்பட, பல்வேறு ஐ.நா. அமைப்புகளில் தீர்மானம் எடுக்கும் முறைகளில் உறுப்பு நாடுகளின் செல்வாக்கைப் பெறுவதில் உண்மையான சமத்துவ நிலை தேவைப்படுகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  

ஐ.நா.நிறுவனத்தின் பணி முறைகள் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றியபோது, தீர்மானம் எடுக்கும் நடைமுறைகளில், நேர்மையான, பகிர்ந்து கொள்ளப்பட்ட மற்றும் சமத்துவ நிலை இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டதையும் பேராயர் அவ்சா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. அறிக்கைகள், அனைத்துலக ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவது பற்றி குறிப்பிட்ட பேராயர் அவ்சா அவர்கள் சண்டைகளின்போது அதில் ஈடுபட்டுள்ள குழுக்கள், அனைத்துலகச் சட்டங்களை நேரத்திற்கு ஏற்றால்போல் விளக்கம் சொல்கின்றன மற்றும் இவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதில் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்கின்றன என்றும் குறை கூறினார்.

மேலும், உலகளாவிய நீதி பற்றிய ஐ.நா. அமர்விலும் உரையாற்றிய, பேராயர் அவ்சா அவர்கள், அனைத்துலக சட்டங்களைக் கடுமையாக மீறுவதைத் தடுப்பது மற்றும் அது குறித்து விசாரணைகள் நடத்துவது அனைத்து நாடுகளின் சட்ட முறையான கடமைகள் என்பதையும் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.