2015-10-21 17:29:00

திருத்தந்தை பிரான்சிஸ் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்


அக்.21,2015. குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து இப்புதன் பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஜெர்மனியின்  München-Freising கர்தினால் Marx, உருகுவாய் நாட்டின் Montevideo கர்தினால் Sturla Berhouet, அயர்லாந்தின் Armagh பேராயர் Eamon Martin ஆகியோர் இம்மான்றம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இம்மூவரையும் பத்திரிகையாளர்க்கு அறிமுகம் செய்து வைத்த திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் குறித்து ஆதாரமற்ற தவறான செய்தி பரப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் சுகமாக இருக்கிறார் எனவும், அவரின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் உண்மையல்ல எனவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, சரியான நம்பத்தகுந்த நபர்கள் ஆகியோருடன் தான் பேசியதாகவும், ஜப்பானிய மருத்துவர் எவரும் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்திக்கவில்லை எனவும், திருத்தந்தைக்கு உடல்நலம் சார்ந்த எந்தவிதப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை எனவும் இப்புதன் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஹெலிகாப்டர் மூலம் வத்திக்கானுக்கு வெளியிலிருந்து எவரும் சனவரி மாதத்தில் வரவில்லை என்றும், திருத்தந்தை நலமுடன் இருப்பதை தான் மீண்டும் உறுதி செய்வதாகவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

திருத்தந்தையின் உடல்நலம் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டது, மாபெரும் பொறுப்பற்ற செயல், மனச்சான்றுக்கு ஒவ்வாதது மற்றும் முழுவதும் சகித்துக்கொள்ள  இயலாதது என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரமற்ற இதேபோன்ற தகவல்களைத் தொடர்ந்து பரப்புவது நியாயப்படுத்தப்பட முடியாதது எனவும், இந்த விவகாரம் இதோடு முடிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி  

திருத்தந்தையின் மூளையில் ஒரு கறுப்பு புள்ளி உள்ளது என்று ஓர் இத்தாலிய ஊடகம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.