2015-10-21 16:38:00

அமைதி ஆர்வலர்கள் : 1997ல் நொபெல் அமைதி விருது வில்லியம்ஸ்


அக்.21,2015. 1997ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, அனைத்துலக நிலக்கண்ணி வெடிகள் தடை கூட்டமைப்பும், இந்த வெடிகள் தடை செய்யப்படுவதற்கு உலக அளவில் பெரும் முயற்சிகள் எடுத்த ஜோடி வில்லியம்ஸ் அவர்களும் பகிர்ந்து கொண்டனர். 1992ம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்ட அனைத்துலக நிலக்கண்ணி வெடிகள் தடை அரசு-சாரா கூட்டமைப்பை ஆறு அரசு-சாரா அமைப்புகள் இணைந்து உருவாக்கின. இக்கூட்டமைப்பு, ஏறக்குறைய நூறு நாடுகளில் தற்போது பணியாற்றி வருகின்றது. பெண்கள், சிறார், முன்னாள் படைவீரர் குழுக்கள், சமயக் குழுக்கள், சுற்றுச்சுழல் குழுக்கள், மனித உரிமைகள், ஆயுதக் கட்டுப்பாடு, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக உழைக்கும் குழுக்களுடன் சேர்ந்து உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பதற்கு முயற்சித்து வருகிறது. இக்கூட்டமைப்பு  பற்றிய விபரங்களைக் கடந்த வாரம் பார்த்தோம். 1997ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்ட மற்றொருவரான ஜோடி வில்லியம்ஸ் அவர்கள், ICBL என்ற இந்த அனைத்துலக நிலக்கண்ணி வெடிகள் தடை கூட்டமைப்பு உருவானதில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர்.

1950ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிறந்த ஜோடி வில்லியம்ஸ் அவர்கள் அமெரிக்க அரசியல் ஆர்வலர். நிலக்கண்ணி வெடிகள் தடை செய்யப்படுவதற்காகவும், மக்களின், குறிப்பாக, பெண்களின் மனித உரிமைகள் காக்கப்படுவதற்காகவும் உழைப்பவராக உலகில் அறியப்படுகிறார். இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை ஊக்குவிப்பதற்கு இவர் எடுத்துவரும் முயற்சிகளும் உலகினரால் பாராட்டப்படுகின்றன. ICBL கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக 1992ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுவரை பணியாற்றியவர். இப்பணியை ஆற்றுவதற்கு முன்னர் நிக்கராகுவா, எல் சால்வதோர் ஆகிய நாடுகளில் போர்கள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களில் 11 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரைப் பற்றிச் சொல்லும் குறிப்புகளில், 1980களில் இவர் ஆற்றிய மனித உரிமைகள் பாதுகாப்புப் பணிகளில் இவரது உயிருக்குக் கடும் அச்சுறுத்தல் இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த எல் சால்வதோர் நாட்டுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்கென, அமெரிக்காவின் லாஸ் ஆஞ்சலெஸ் நகரை மையமாகக் கொண்ட மனிதாபிமான இடர்துடைப்புப் பணிகளை ஊக்குவித்து நடத்தி வந்தார். 1984ம் ஆண்டு முதல் 86ம் ஆண்டு வரை, நிக்கராகுவா-கொண்டுராஸ் கல்வித் திட்டத்தின் ஒருஙக்ணைப்பாளராகப் பணியாற்றினார். மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் வாஷிங்டனில் ஆங்கிலத்தை இரண்டாவது பாடமாக இவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 

வாஷிங்டனில் பன்னாட்டு உறவுகள் குறித்த படிப்பில் முதுகலைப் பட்டம், இஸ்பானிய மொழி ஆசிரியர் கல்வியில் முதுகலைப் பட்டம் மற்றும் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டயக் கல்வி முடித்தவர் ஜோடி வில்லியம்ஸ். பல்வேறு அரசுகள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்புகள், அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து பணியாற்றியிருக்கிறார். அச்சமயங்களில் ICBL கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும், யுக்திகளை வழங்குவதில் முதன்மையானவராகவும் திகழ்ந்துள்ளார். அதோடு, ஓர் அரசு-சாரா அமைப்பில் அலுவலகராகவும், 90 நாடுகளில் 1300 அரசு-சாரா அமைப்புகளுக்கு அனைத்துலக அளவில் சக்தியூட்டும் கருவியாகவும் செயல்பட்டுள்ளார்.

1992ம் ஆண்டில், ICBL கூட்டமைப்பு உருவான நாள் முதல், ஜோடி வில்லியம்ஸ் அவர்களும், இக்கூட்டமைப்பும் சேர்ந்து உலகில் நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தம் கொண்டு வரப்படுவதற்குக் கடுமையாக உழைத்தனர். 1997ம் ஆண்டு செப்டம்பரில் ஆஸ்லோவில் நடைபெற்ற தூதரக அளவிலான கருத்தரங்கில் இத்தடை ஒப்பந்தம் கொண்டு வரப்படும் திட்டம் ஏறக்குறைய நிறைவேறியதாகவே இருந்தது. இதற்கு மூன்று வாரங்கள் சென்று நொபெல் அமைதி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. ஜோடி வில்லியம்ஸ் அவர்கள் இவ்விருதைப் பெற்றபோது, இவ்விருதின் ஏறக்குறைய நூறு ஆண்டு வரலாற்றில், உலக அளவில் இவ்விருதைப் பெற்ற பத்தாவது பெண்ணாகவும், மூன்றாவது அமெரிக்கப் பெண்ணாகவும் இருந்தார். 2004ம் ஆண்டு நவம்பரில், ஈரானின் நொபெல் விருதாளர் ஷிரின் இபாதி, கென்யாவின் பேராசிரியர்ர் வாங்காரி மாத்தாய் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தியதன் பயனாக, 2006ம் ஆண்டு சனவரியில் நொபெல் பெண்கள் அமைப்பை உருவாக்கினார். இதன் வழியாக ஆறு பெண் நொபெல் விருதாளர்கள் குழு உருவானது. உலகெங்கும் நீதி மற்றும் சமத்துவத்துடன் அமைதி ஏற்பட உழைக்கும் பெண்களுக்கு இக்குழு ஆதரவாக இருந்து வருகிறது.

பேராசிரியர் வில்லியம்ஸ் அவர்கள், மனித உறிமைகள் பாதுகாப்பு மற்றும் உலகளாவியப் பாதுகாப்புக்காக உழைப்பவர். 15 கவுரவ பட்டயங்களையும் இவர் பெற்றுள்ளார். 2004ம் ஆண்டில் ஃபோர்பெஸ் இதழ், இவரை உலகின் 100 மிக அதிக வல்லமைபடைத்த பெண்களில் ஒருவராகப் பெயரிட்டது. கிளாமுர் இதழ், இவரை ஆண்டின் பெண் என்ற அங்கீகாரத்தையும் வழங்கியது. ஹில்லரி கிளிண்டன், பார்பரா வால்ட்டர்ஸ், கேட்டி ரூரிக் போன்றோர் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். உலகில் மனித உரிமை ஆர்வலர்களின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.