2015-10-20 15:57:00

பிரிவினைச் சுவர், புனித நகரத்தின் முகத்தைச் சிதைக்கின்றது


அக்.20,2015. எருசலேமில் தடுப்புச்சுவர் கட்டப்படுவது குறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், எருசலேமின் யூத மற்றும் அரபுப் பகுதிகளுக்கு இடையே பிரிவினைச் சுவர் எழுப்புவது, எருசலேம் புனித நகரின் முகத்தைச் சிதைக்கின்றது என்று கூறினார்.

எருசலேமின் பிரிவினைச் சுவர் கோட்பாடு தொடர்ந்து இடம்பெற்றால், ஒவ்வொருவரும் எருசலேம் சென்று, பிறரிலிருந்து தங்களைப் பிரிக்கும் தனது சொந்தச் சுவரையும், தடையையும் அமைக்க வேண்டியிருக்கும் என்று கவலை தெரிவித்தார் முதுபெரும் தந்தை Fouad Twal.

எருசலேமின் Jabal Mukkaber அரபுப் பகுதிக்கும், Armon Hanatziv யூதக் குடியிருப்புக்கும் இடையே இஸ்ரேல் காவல்துறை பிரிவினைச் சுவர் எழுப்புவது பற்றிக் கருத்து தெரிவித்த எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், எருசலேம் புனித நகரம், ஒன்றிணைந்த மற்றும் பிளவுபடாத நகரம் என்று கூறிய இஸ்ரேல் அதிகாரிகளே இப்போது தடுப்புச் சுவர் எழுப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த அக்டோபர் ஆரம்பத்திலிருந்து பாலஸ்தீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் குறைந்தது 43 பாலஸ்தீனர்களும், 7 இஸ்ரேல் மக்களும் இறந்துள்ளனர்.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.