2015-10-20 16:29:00

சாலை விபத்து இறப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகம்


அக்.20,2015. உலக அளவில் இடம்பெறும் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக சாலை விபத்துக்கள் உள்ளன என்றும், இவற்றால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 12 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இறக்கின்றனர் என்றும் WHO உலக நலவாழ்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகின்றது.

“சாலை பாதுகாப்பு 2015” என்ற தலைப்பில் இத்திங்களன்று புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள WHO நிறுவனம், சாலை பாதுகாப்பு விதிமுறைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை, குறிப்பாக, ஏழை நாடுகளில் இறக்கும் ஏழைகளின் எண்ணிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டுள்ள 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளில், சாலை பாதுகாப்பு குறித்த திட்டங்களுக்கு உடனடி கவனம் செலுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை.

வருகிற நவம்பர் 18,19 தேதிகளில் பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் நடைபெறவிருக்கும் சாலை பாதுகாப்பு குறித்த 2வது உயர்மட்ட அளவிலான உலக மாநாட்டை முன்னிட்டு WHO நிறுவனம் இப்புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகிலுள்ள வாகனங்களில் 54 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலே சாலை விபத்து இறப்புகளில் 90 விழுக்காடு இடம்பெறுகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.