2015-10-19 15:35:00

வாரம் ஓர் அலசல் – இல்லை என்று தெரிந்த பிறகு, கவலை எதற்கு?


அக்.19,2015. காயத்ரி சங்கரன். 49 வயது நிரம்பிய இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலைஞர். இவர், கர்னாடக இசைப் பாடகி, வயலின் இசைக் கருவி மீட்டுபவர். இசையில் முனைவர் பட்டப் படிப்பை முடித்திருப்பவர், தொடர்ந்து பயணித்து இப்போது இசையில் முனைவர் மேல்நிலை பட்டப் படிப்பையும் முடிக்கவிருக்கிறவர். இசைக்கான குறிப்புகளை பிரெய்ல் முறையில் கொண்டு வந்தவர். தனது இசை ஆர்வம் பற்றி அவள் விகடன் இதழில் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளார் பத்மஸ்ரீ காயத்ரி.

இசை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைவிட, இசைக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால், அந்த மகா பெருங்கடலில் கண்கள் மூடி என்னால் கரை சேர்ந்திருக்க முடியுமா! எனக்குப் பிறவியிலேயே கண் பார்வை இல்லை. மூன்று வயதில் இருந்து அம்மா சுப்புலக்ஷ்மி குருநாதன்தான் எனக்கு இசையைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், என் ஆறு வயதில் அம்மா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு அலம் ராஜு சோமேஸ்வரராவிடம் தொடர்ந்து இசை கற்றேன். அப்போது என் பாட்டிதான் எனக்காக இசைக்குறிப்பு எடுத்து வைப்பார். இப்படியே இருளில் இசையைக் கற்று, என் எட்டு வயதில் முதல் கச்சேரி முடித்தேன். இன்று வரை தொடர்கிறது இசையும், மேடைகளும். வாய்ப்பாட்டைத் தொடர்ந்து, வயலினும் கற்றேன். இசையைப் பற்றி ஏட்டுக் கல்வி என்ன சொல்கிறது என்ற ஆர்வம் வர, இசையை கல்லூரியில் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். முனைவர் பட்டத்திற்குப் படித்தபோது, பாடத்தை உள்வாங்க மிகவும் சிரமப்பட்டேன். அந்தச் சிரமம் இனிவரும் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக் கூடாது என, இசைக் குறிப்புகள் அனைத்தையும் பிரெய்ல் முறையில் மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து, அதை முழுமையாக முடித்தேன். நான் கற்ற கலையை பிறருக்கும் கற்றுக்கொடுக்க எண்ணி, இசை வகுப்புகள் எடுத்து வருகிறேன். என் இசை முயற்சிகளில்... அன்பான கணவர், மாமியாரின் ஆதரவு உண்டு.

தனது இசைப் பயணம் பற்றி பகிர்ந்து கொண்ட காயத்ரி அவர்கள், அப்துல் கலாம் ஐயாதான் தனது வாழ்வுக்கு முன்மாதிரிகை என்று சொல்லி அவரைச் சந்தித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளின் தினமாகிய டிசம்பர் 3ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுக்குத் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2005-ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அப்துல் கலாம் அவர்கள் கையால் தேசிய விருதை நான் வாங்கினேன். அதற்கு அடுத்த ஆண்டே அவர் கையால் பத்மஸ்ரீ விருது வாங்கினேன். அந்தத் தருணத்தில், மாற்றுத்திறனாளியாகிய நான், பத்மஸ்ரீ விருது பெறும் முதல் பார்வையற்ற கலைஞர் என்ற பெருமையில் கரைந்துபோய் நின்றேன். இருளை மட்டுமே அறிந்திருந்த என்மீது அப்போது விழுந்தது தேசிய வெளிச்சம்! ஒரு சந்திப்பில் குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் எனக்குக் காட்டினார் அப்துல் கலாம். ஒவ்வொரு செடிக்கு அருகிலும் என்னை அழைத்துச் சென்று, அதன் பெயர், பூவின் நிறம், அவற்றின் சிறப்புகளை எல்லாம் சுவைபட அவர் சொன்ன விதத்தில்... என் மனக்கண்ணால் அந்த மலர்களைப் பார்க்க முடிந்தது. அந்தளவுக்கு அன்பும், புரிதலும் கொண்டவர் அப்துல் கலாம். இசையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட அவர், என் ஆராய்ச்சி பற்றி நிறைய கேள்விகள் கேட்டு ஆர்வத்துடன் தெரிந்துகொண்டார்

கனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியையொட்டி இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ள பத்மஸ்ரீ காயத்ரி அவர்கள் ஓர் அருமையான ஆழமான கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

ஒரு விடயம் நம்மிடம் இல்லை என்று தெரிந்த பிறகு, அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மிடம் இருப்பதைக்கொண்டு என்ன செய்யலாம் என்று, அடுத்த முயற்சிகளைத்தான் பார்க்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகள் சாதனையாளர்கள் ஆக எந்தத் தடையும் இல்லை. தேவை, நம்பிக்கை மட்டுமே! என்னைப் பொறுத்தவரை, எதிர்மறை விடயங்களை உடனே மறந்து, எப்போதும் நேர்மறை சக்தி இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இதுதான் என் உற்சாகத்துக்கான இரகசியம் என்றார் திருமதி காயத்ரி.

ஒரு திறமை நம்மிடம் இல்லை என்று தெரிந்த பிறகு, அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மிடம் இருப்பதைக்கொண்டு என்ன செய்யலாம் என்று, அடுத்த முயற்சிகளைத்தான் பார்க்க வேண்டும். அன்பர்களே, என்ன அழகான வாழ்க்கைத் தத்துவம். நம் வாழ்வில் பலதரப்பட்ட, பல திறமைகள் கொண்டுள்ள மக்களை தினமும் நாம் சந்திக்கிறோம். சிலர் அபாரத் திறமைகளை வெளிப்படுத்துவதையும், இன்னும் சிலர் தங்களிடம் சிறப்பாக விளங்கும் திறமையில் உயர்ந்து நிற்பதையும் பார்க்கிறோம். அதே நேரம், திறமைகள் இருந்தும் அவற்றை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டாமல் விதியை நொந்து கொள்பவர்களையும் சந்திக்கிறேம். இன்னும் சிலர் தங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளாமல், இல்லாத திறமையில் முன்னேறத் துடித்து அதில் முன்னேறாமல் இருப்பதையும் பார்க்கிறோம். ஒரு குழுவில் இருந்த ஒருவர், ஒரு பாடலைக்கூட சுருதி தப்பாமல் பாட முடியாதவர். குரல்வளமும் இரசிக்கும்படியானது அல்ல. ஆனால் அவர் ஆர்மோனியப் பெட்டியில் பல மணிநேரங்கள் பழகுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் இசையில் ஆர்வம் உள்ள மற்றவர்களுக்கு அந்த ஆர்மோனியப் பெட்டி சிறிது நேரமே கிடைக்கும். தனக்கென ஒரு கிட்டார் வைத்துக்கொண்டு அதிலும் சில ஆண்டுகளாக பாடல்களை வாசித்து பழகிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இன்னும் முழுமையாக ஒரு பாட்டுக்கூட அவரால் வாசிக்க முடியவில்லை. ஒருநாள் அந்த மனிதரிடம், உங்களுக்கும் இசைக்கும் வெகு தூரமாக இருக்கின்றது, ஆனால் உங்களுக்கு விளையாட்டில் முன்னேறத் திறமை இருக்கிறது,  துணிகளில் வேலைப்பாடுகளைத் திறம்படச் செய்ய்யும் ஆற்றல் இருக்கின்றது. அவற்றை முயற்சி செய்யலாமே என்று சொன்னதை அவர்கள் விரும்பவில்லை. முகம் வாடியது. அன்பர்களே, ஒருவர் தன்னிடம் இல்லாத திறமையை வளர்த்துக்கொள்ள பணத்தையும் நேரத்தையும் ஏன் விரயமாக்க வேண்டும்! அதற்குப் பதிலாக இறைவன் ஒவ்வொருவரையும் எத்தனையோ திறமைகளால் ஆசிர்வதித்திருக்கிறார். அவைகளில் வளர்வதற்கு முயற்சிக்கலாமே!

அக்டோபர் 19, இத்திங்கள், 1983-ல் இயற்பியலுக்கான நொபெல் விருது பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பிறந்த நாள். இவர் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை வழி உறவினரான சர் சி.வி.ராமன் அவர்களும், 1930ம் ஆண்டின் இயற்பியலுக்கான நொபெல் விருது பெற்றவர். (சர் சந்திரசேகர வெங்கட் ராமன் அவர்கள் திருச்சியில் 1888ம் ஆம்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தவர்) சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் அம்மா மொழிபெயர்ப்பாளர். அப்பா ரயில்வேயில் துணை ஆடிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தனது 18-வது வயதில், ‘தி காம்டன் ஸ்கேட்டரிங் அண்ட் தி நியூ ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இயற்பியலில் அவருக்கு இருந்த அபார அறிவு, பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பைத் தந்தது. விண்மீன்கள் பற்றிய ஆய்வில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளைக் குள்ளர்கள் (white dwarf) என்று அழைக்கப்படும் விண்மீன்களைப் பற்றிய அப்போதைய அறிவியல் நம்பிக்கைகளைத் தவறு என்று கூறினார். சூரியனின் நிறையைப்போல் 1.4 மடங்கு அதிக நிறை கொண்ட விண்மீன்கள் எரிபொருள் தீர்ந்ததும், விண்மீன்கள் உட்பட அருகில் உள்ள பொருட்களை உள்ளிழுத்துக்கொள்ளும் என்றார். அப்போது அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், இதே கண்டுபிடிப்புக்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது.

தனது கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்காக, சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் தளர்ந்து விடவில்லை. தனது அறிவியல் ஆய்வையும் கிட்ப்பில் போடவில்லை. 

ஒருநாள் அந்தக் காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் கூட்டம் ஒன்றை நடத்தின. அங்கு வந்திருந்த எல்லா இனங்களும் தங்களைப் பற்றித் திருப்தியில்லாமல் பேசிக் கொண்டிருந்தன. பறவைகள், எங்களால் பறக்க முடிகின்றது, ஆனால் நீந்தவோ குழி பறிக்கவோ தெரியவில்லை என்றன. முயல் கூட்டமோ, எங்களால் வேகமாக ஓட முடிகின்றது, ஆனால் நீந்தவோ பறக்கவோ தெரியவில்லை என்றன. இப்படி ஒவ்வொன்றும் தங்களைப் பற்றிக் குறைவாகப் பேசின. எனவே தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு கல்லூரியை உருவாக்க அவை தீர்மானித்தன. கல்லூரியும் தொடங்கப்பட்டது. வகுப்புகளும் பயிற்சிகளும் தொடங்கின. நடைமுறை இறுதித் தேர்வும் வந்தது. முயல், ஓட்டத்தில் முதலிடத்தில் வந்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றது. அதேசமயம் அதனை ஒரு மரக்கிளை மீது அமரவைத்து “பற பற” என்று ஊக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பறக்க முயற்சித்த போது கீழே தரையில் விழுந்து அடிபட்டது. அதன் இரண்டு கால்களும் முறிந்தன. எனவே அந்தத் தேர்வில் அது தோல்வியடைந்தது. அடுத்து ஒரு பறவைக்கான தேர்வு. அது பறப்பதில் முதலிடத்தில் வந்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றது. ஆனால் ஒரு மச்சம் போன்ற அளவுக்குக் குழி தோண்டுமாறு அதனிடம் சொல்லப்பட்ட போது. அதில் படுதோல்வி அடைந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்தப் பறவையால் துளை போட முடியவில்லை. மாறாக அதற்குப் பிறகுச் சரியாகப் பறக்க முடியாத அளவுக்கு அது தனது இறக்கைகளையும் அலகையும் மிக மோசமாகச் சேதப்படுத்தியது.

இந்தக் கதையை எழுதிய Buscaglia என்ற எழுத்தாளர் சொல்கிறார் : மீன் மீனாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஒரு நேர்த்தியான மீன் வியத்தகு மீனாகத்தான் இருக்க முடியுமே தவிர பறவையாகவோ முயலாகவோ ஆக முடியாது. ஒரு புகழ்பெற்ற செபம் நமக்குத் தெரியும். இறைவா, என்னால் மாற்ற இயலாததை மனஅமைதியோடு ஏற்கவும், மாற்ற வேண்டியதை மாற்றவும், இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியவும் ஞானத்தை எனக்கு அருளும். ஒவ்வொரு நாளும் அந்தந்த நொடிப்பொழுதில் வாழவும், அந்த தருணத்தை நான் அனுபவிக்கவும், கடினமான வாழ்வே அமைதிக்கான பாதை என்பதை ஏற்கவும் வரம் தாரும்.

அன்பர்களே, ஒரு திறமை நம்மிடம் இல்லை என்று தெரிந்த பிறகு, அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மிடம் எத்தனையோ மற்ற திறமைகள் இருக்கின்றன. எனவே இருப்பதைக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்து அடுத்த ஆகவேண்டியவைகளைத்தான் நாம் பார்க்க வேண்டும். சிந்திப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.