2015-10-19 15:53:00

இயேசுவின் தாழ்மை மற்றும் சிலுவையின் பாதையைப் பின்பற்றுவோம்


அக்.19,2015. உலகம் புரிந்துகொள்ளும் அதிகாரத்திற்கும், இயேசுவின் போதனை மற்றும் அவரின் எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில் தாழ்மையான பணிபுரியும் அதிகாரத்திற்கும் இடையே ஒத்திசைவே கிடையாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புகழை அடைய வேண்டுமென்ற பேரார்வம் கொண்ட இலட்சியமும், அறநெறியைப் பின்னுக்குத் தள்ளி தொழிலில் முன்னேற வேண்டுமென்ற போக்கும் கிறிஸ்தவ சீடத்துவத்தோடு ஒத்திணங்கிச் செல்லாதவை என்றும், வெற்றி, மதிப்பு, புகழ், இவ்வுலக வெற்றிகள் ஆகியவை, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் தத்துவத்தோடு ஒத்திணங்கிச் செல்லாதவை என்றும் கூறினார் திருத்தந்தை.

மாறாக, துன்பங்களின் மனிதராகிய இயேசுவுக்கும், நம் துன்பங்களுக்கும் இடையே ஒத்திசைவு இருக்கின்றது என்று, இஞ்ஞாயிறன்று நான்கு புதிய புனிதர்களை திருஅவைக்கு அறிவித்த திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

89வது மறைபரப்பு ஞாயிறான அக்டோபர் 18 இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், லூயிஸ் மார்ட்டின், மரி செலி கெரின், இத்தாலிய அருள்பணியாளர் வின்சென்சோ குரோஸ்ஸி, இஸ்பானிய அருள்சகோதரி அமல மரியின் மரியா ஆகிய நால்வரையும் புனிதர்கள் என்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எசாயா இறைவாக்கினர் கூறிய ஆண்டவரின் துன்புறும் ஊழியன் மற்றும் அவரின் மீட்புப்பணி பற்றிய இஞ்ஞாயிறு முதல் வாசகத்தை மையப்படுத்தி முதலில் மறையுரையாற்றிய திருத்தந்தை, ஊழியன் என்பவர் மதிப்புமிக்க நிலையில் உள்ள ஒருவர் அல்ல, ஆனால் அவர் துன்புறும் ஊழியன் என்று கூறினார்.

இந்த நான்கு புதிய புனிதர்களும், பிறருக்குப் பணிவான சேவை புரிந்ததில், இயேசுவை களைப்பின்றி பின்பற்றியவர்கள் என்றும், இவர்கள் நால்வரும் விண்ணகப் போதகரைப் பின்பற்றுவதில் தாழ்மை மற்றும் பிறரன்புப் பண்புகளை மிக அதிகமாக வெளிப்படுத்தியவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்கள் யாக்கோபும், யோவானும் இறையரசில் இயேசுவின் வலது புறத்திலும் இடது புறத்திலும் அமருவதற்குக் கேட்ட மாற்கு நற்செய்தி வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இவர்களின் எல்லைக்கோடு இவ்வுலக மாயைகளால் நிறைந்திருந்தது என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய அருள்பணியாளர் புனித வின்சென்சோ குரோஸ்ஸி(1845-1917), பேச்சாளர்கள் புதல்வியர் சபையை நிறுவியவர். இஸ்பானிய அருள்சகோதரி அமல மரியின் மரியா(1926-1998) திருச்சிலுவை சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர். லூயிஸ் மார்ட்டின், மரி செலி கெரின் தம்பதியர், புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.