2015-10-19 16:23:00

ஆசியாவில் பசியை ஒழிப்பதற்கு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்


அக்.19,2015. ஆசியாவுக்குத் தேவைப்படும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் அப்பகுதியில் மிகுந்த வறுமை நிலையிலுள்ள மக்களே என்று மனிலாவை மையமாகக் கொண்ட ஆசிய விவசாயிகள் கூட்டமைப்பு கூறியது.

கடந்த வாரத்தில் உலகில் கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட ஆசிய விவசாயிகள் கூட்டமைப்பு, ஆசியாவுக்கு அவசியமான  உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் மக்கள் மத்தியில் நிலவும் பசிக்கொடுமை அகற்றப்படுவதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறியது.

உண்மையில், ஆசியாவிலுள்ள அரசுகள் பசிக்கொடுமையை ஒழிப்பது குறித்து அதிகமாக அக்கறை எடுக்கவில்லை என்று குறை கூறியுள்ள அக்கூட்டமைப்பு, ஆசியாவில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நிலைமையை மேலும் மோசமடைய வைத்துள்ளது என்றும் கூறியது.

பிலிப்பைன்சில் பத்து விவசாயிகளுக்கு ஒன்பது பேர் நிலமற்றவர்கள் மற்றும் அவர்கள் பயிரிடும் நிலங்களையும் உரிமை கொண்டாட இயலாது என்று பிலிப்பைன்ஸ் விவசாய இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பங்களாதேஷிலுள்ள ஏறக்குறைய 16 கோடி மக்களுள் 45 இலட்சம் பேர் நிலமற்றவர்கள் என்று அரசின் புள்ளி விபரம் கூறுகிறது.   

உலகில் பசியாய் இருப்பவரில் 60 விழுக்காட்டினர் பெண்கள். தினமும் 30 கோடிச் சிறார் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர்.  

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.