2015-10-17 16:09:00

மார்ட்டின் தம்பதியருக்குப் புனிதர் பட்டமளிப்பு


அக்.17,2015. 89வது மறைபரப்பு ஞாயிறான அக்டோபர் 18 இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், மார்ட்டின் தம்பதியர், பேச்சாளர்கள் புதல்வியர் சபையை நிறுவிய இத்தாலிய அருள்பணியாளர் வின்சென்சோ குரோஸ்ஸி(1845-1917), திருச்சிலுவை சகோதரிகள் சபையின் இஸ்பானிய அருள்சகோதரி அமல மரியின் மரியா(1926-1998) ஆகியோரை, புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை 10.15 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையருடன் இணைந்து நிறைவேற்றும் திருப்பலியில், புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் லூயிஸ் மார்ட்டின், மரி செலி ஆகிய இருவரைப் புனிதர்களாக அறிவிப்பார் திருத்தந்தை.

திருஅவையில் திருமணமானவர்கள் அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும்,  ஒரு தம்பதியர் இருவரையும் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிப்பது திருஅவை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியின் கணக்குப்படி, உலக மக்கள்தொகை 7,093,798,000ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 70,421,000 அதிகமாகும். அதே 2013ம் ஆண்டில் உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை 1,253,926,000 ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 25,305,000 அதிகமாகும். ஆப்ரிக்காவில் 0.29%, அமெரிக்காவில் 0.38%,ஆசியாவில் 0.03%, ஐரோப்பாவில் 0.03% அதிகமாகும். ஆனால் ஓசியானியாவில் இது 0.01% குறைவாகும். உலக ஆயர்களின் எண்ணிக்கை 5,173. குருக்களின்  எண்ணிக்கை 4,15,348.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.