2015-10-17 16:17:00

Nablus யோசேப் கல்லறை தாக்குதலுக்கு முதுபெரும் தந்தை கண்டனம்


அக்.17,2015. புனித பூமியின் Nablusலுள்ள முதுபெரும் தந்தை யோசேப் கல்லறை தீ வைத்து அழிக்கப்பட்டிருப்பது உச்சகட்ட கொடூரம் நிறைந்த அறிவற்ற செயல் என்று தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம்.

இத்தாக்குதல் சகித்துக்கொள்ள இயலாத தெய்வநிந்தனை என்றும், கிறிஸ்தவம், இஸ்லாம் அல்லது யூதம் என, எம்மதத்தைச் சார்ந்ததாய் இருந்தாலும், புனித இடங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அலுவலகம் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புனித பூமியில் சண்டையிட்டுவரும் இரு தரப்புகளும் உரையாடலில் ஈடுபட்டு பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறும் கேட்டுள்ளது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம்.

இவ்வியாழன் இரவுக்கும், இவ்வெள்ளி காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில், யூதர்களின் புனித தலமான Nablusலுள்ள முதுபெரும் தந்தை யோசேப் கல்லறை தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில்,  வெஸ்ட் பேங்கிலுள்ள முதுபெரும் தந்தை யோசேப் கல்லறைக்கு, நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன இளையோர் பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்துள்ளனர்.

மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. நிறுவனமும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக உச்சகட்டத்தை எட்டியுள்ள இம்மோதல்களில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர், நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.