2015-10-17 16:04:00

11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நவம்பர் 25-30


அக்.17,2015. கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு, வருகிற நவம்பர் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்கள் இச்சனிக்கிழமையன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத்  திருத்தூதுப் பயணமாக அமையவுள்ள இதில், திருத்தந்தை பயண நிகழ்வுகளை நடத்தும் மத்திய ஆப்ரிக்க குடியரசு தொடர்ந்து உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்ட நாடு என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆறு நாள்கள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில், சேரிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற முகாம்களையும் திருத்தந்தை பார்வையிடுவார் என்றும், நவம்பர் 25ம் தேதி காலை 7.45 மணிக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு, கென்யா நாட்டுத் தலைநகர் நைரோபிக்கு திருத்தந்தை முதலில் செல்வார் என்றும் கூறப்பட்டது.

நவம்பர் 27ம் தேதி வெள்ளி காலையில் நைரோபிக்கு அருகிலுள்ள Kangemi ஏழைகள் வாழும் பகுதியைப் பார்வையிட்டு, பின்னர் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை, மாலை 3.30 மணிக்கு நைரோபியிலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து உகாண்டா தலைநகர் Entebbe செல்வார்.

நவம்பர் 29ம் தேதி ஞாயிறன்று Entebbeலிருந்து மத்திய ஆப்ரிக்க குடியரசு தலைநகர் Bangui சென்று பயண நிகழ்வுகளை முடித்து நவம்பர் 30ம் தேதி மாலை 6.45 மணிக்கு உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசுத்தலைவர்கள், அரசியல், தூதரக அதிகாரிகளைச் சந்திப்பது, Banguiன் Koudoukou மசூதியில் முஸ்லிம் சமூகத்தைச் சந்திப்பது, உகாண்டாவில் மறைசாட்சிகளுக்காகத் திருப்பலி நிறைவேற்றுவது, ஆங்லிக்கன் சமூகத்தைச் சந்திப்பது என்று பல்வேறு நிகழ்வுகள் இத்திருத்தூதுப் பயணத்திட்டத்தில் உள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.