2015-10-16 17:12:00

புனித குழந்தைதெரேசாவின் பெற்றோர்


அக்.16,2015. புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் லூயிஸ் மற்றும் Zélie மார்ட்டின் தம்பதியர் அக்டோபர் 18, வருகிற ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்படுவது குறித்து ப்ரெஞ்ச் ஆயர் பேரவை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கியது. 

மக்களால் அதிகம் அன்புசெலுத்தப்படும் ப்ரெஞ்ச் புனிதர் குழந்தை தெரேசாவின் பெற்றோர் லூயிஸ் மற்றும் Zélie மார்ட்டின் தம்பதியர், குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றம் நடந்துகொண்டிருக்கும் நாள்களில் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்றனர். ஒரே திருவழிபாட்டில் தம்பதியர் இருவரும் புனிதர்களாக அறிவிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த ப்ரெஞ்ச் தம்பதியரின் பரிந்துரையால் நடந்த புதுமை ஒன்றை கடந்த மார்ச்சில் அங்கீகரித்து, ஜூன் 27ம் தேதி நடந்த கர்தினால்கள் அவையில் புனிதப்பட்டமளிப்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இசைவு தெரிவித்தார். மேலும், இத்தம்பதியர் பற்றித் தெரிவித்த புனிதர் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், லூயிஸ் மற்றும் Zélie மார்ட்டின் தம்பதியர், திருமண மற்றும் குடும்ப ஆன்மீகத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றார்.

1858ம் ஆண்டு திருமணமான இத்தம்பதியருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் நால்வர் குழந்தைப் பருவத்திலே இறந்தனர். மற்ற ஐவர் துறவு வாழ்வை மேற்கொண்டனர். இத்தம்பதியர் தங்கள் வாழ்வு முழுவதும், அன்றாடத் திருப்பலியில் தவறாமல் கலந்து கொண்டனர், செபம், நோன்பிருத்தல், நோயாளிகள், வயதானவர்களை சந்தித்தல், வீட்டில் ஏழைகளை வரவேற்றல் போன்றவற்றையும் செய்தனர். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறும் திருப்பலியில்,  லூயிஸ் மார்ட்டின் தம்பதியர், இன்னும், பேச்சாளர்கள் புதல்வியர் சபையை நிறுவிய இத்தாலிய அருள்பணியாளர் வின்சென்சோ குரோஸ்ஸி(1845-1917), திருச்சிலுவை சகோதரிகள் சபையின் இஸ்பானிய அருள்சகோதரி அமல மரியின் மரியா(1926-1998) ஆகியோரையும் புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பத்திரிகையாளர் கூட்டத்தில், லிசிய திருத்தல அதிபர் அருள்பணி Olivier Ruffray, மார்ட்டின் தம்பதியர் புனிதர் பட்டத்திற்குப் பணிகள் ஆற்றிய அருள்பணி Romano Gambalung ஆகியோரும் இருந்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.