2015-10-16 17:04:00

உலக ஆயர்கள் மாமன்றத்தின் 50ம் ஆண்டு நிறைவு அக்டோபர் 17


அக்.16,2015. இவ்வெள்ளி காலை தொடங்கிய குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 12வது பொது அமர்வு மற்றும் 11வது பொது அமர்வு குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், மொத்தம் முப்பது பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று கூறினார்.

இந்த மாமன்றத்தின் Instrumentum laboris என்ற விவாதத் தொகுப்பின் 3வது பகுதி குறித்து 13 சிறிய குழுக்கள் இவ்வெள்ளி மாலையில் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன என்றும், உலக ஆயர்கள் மாமன்றம் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா இச்சனிக்கிழமை காலையில் நடைபெறும் என்றும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

மேலும், இவ்வுலக மாமன்றத்தின் விவாதத் தொகுப்பில் மன்னிப்பு என்ற சொல் ஒரே ஒருமுறை மட்டுமே காணப்படுகின்றது, அது போதாது என்ற பல மாமன்றத் தந்தையர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல மாமன்றத் தந்தையர், கலப்புத் திருமணங்கள் குறித்து நேர்மறை கருத்துக்களைத் தெரிவித்தனர் என்றும், உரையாடல் வழியாக அன்பு வெளிப்படுத்தப்படுகின்றது என்றும் கூறியதாகச் சொல்லப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.