2015-10-16 16:36:00

ஆதாயங்களும்,அநீதியான கொள்கைகளும் FAOன் செயல்களுக்குத் தடை


அக்.16,2015. இன்றைய உலகில் கட்டுக்கடங்காத முறையில் ஆதாயம் தேடுதல்,  குறிப்பிட்ட ஆதாயங்களில் கவனம் செலுத்துதல், அநீதியான கொள்கைகளின் விளைவு ஆகியவை, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் செயல்களை சோர்வடையச் செய்கின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு தினத்திற்கென, உரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள, FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் Jose 'Graziano da Silva அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகில் நிலவும், சுயநல ஆதாயப் போக்குகளும், அநீதியான கொள்கைகளும்

நாடுகளுக்குள் இடம்பெறும் நடவடிக்கைகளை மெதுவாகச் செல்ல வைக்கின்றன அல்லது அவற்றுக்குத் தடங்கலாக உள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, இதனைக் களைவதற்கு அனைத்துலக சமுதாயத்திற்குள் உயிரோட்டமான ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது  என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் FAO நிறுவனம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி வாசிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உட்பட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  

உணவுப் பாதுகாப்பு பலருக்கு எட்டாத இலக்காகவே இருந்து வருகின்றது என்றும், இப்பூமியின் பல்வேறு இடங்களின் தற்போதைய கவலை நிறைந்த சூழல், உணவு பாதுகாப்பு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகினரை உந்தித் தள்ளுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் வளங்கள் ஒரு சிலரின் கைகளில் இருக்கும்போது, நலிந்தவர்கள் சிதறிய உணவுப்பொருள்களை மட்டும் சேகரிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர், இந்நிலைக்கு முன்னர் நல்ல பரிந்துரைகளோடு மட்டும் நின்றுவிட முடியாது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO) உருவாக்கப்பட்டது. இந்நாளில் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நாடுகள் உலக உணவு தினத்தைச் சிறப்பிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.