2015-10-16 17:08:00

அடக்குமுறைகளிலும்கூட ஆசியாவின் மறைப்பணி உரையாடலே


அக்.16,2015. அடக்குமுறைகளிலும்கூட ஆசியாவின் மறைப்பணி, சந்திப்பும் உரையாடலுமே என்று இவ்வியாழன் இரவில் கூறினார் மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் எல்லா மக்களையும் அன்புகூர்வதாலும், இயேசு மற்றும் அவரின் நற்செய்தியின் மாபெரும் கொடையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாலும் நாம் மறைப்பணித் தளங்களுக்குச் செல்கின்றோம் என்று மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.

உரோம் மறைமாவட்ட மறைப்பணி இரவு செபவழிபாடு நிகழ்வில் சான்று பகர்ந்த கர்தினால் தாக்லே அவர்கள், ஆசியக் கண்டம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சிறிய மந்தையாக இருக்கின்றனர், ஆயினும் இயேசுவின் மகிழ்வையும் தங்களின் மகிழ்வான வாழ்வையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஆசியாவிலுள்ள  கிறிஸ்தவர்கள், இயேசுவையும் அவரின் நற்செய்தியையும், கருணை, பாசம், புன்சிரிப்பு, அன்பு, பணி ஆகியவை வழியாக அறிவிக்கின்றனர் என்றும், ஆசியாவில் பொதுவாக கிறிஸ்தவர்கள் மதிக்கப்படுகின்றனர், தங்களின் விசுவாசத்தை நடைமுறைப்படுத்த சுதந்திரம் கொண்டுள்ளனர் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

ஒருசமயம் தாய்வானில் ஒரு துறவு சபை நடத்திய பள்ளியைப் பார்வையிட்டபோது அங்கிருந்த ஏறக்குறைய 700 மாணவர்களில் 20க்கும் குறைவானவர்களே கிறிஸ்தவர்களாக இருந்தனர், இது தங்களுக்குத் தோல்வி அல்ல, ஆனால், இயேசு அனைத்துச் சிறாரையும் அன்புகூர்ந்து அனைவரையும் வரவேற்கிறார் என்று வாழ்வால் காட்டுகிறோம் என்று அப்பள்ளியின் தலைவர் கூறினார் என்பதையும் பகிர்ந்துகொண்டார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.