2015-10-14 17:35:00

புனிதப்போருக்கான அழைப்பு வன்முறையை அதிகரிக்கும்


அக்.14,2015. சில மதங்களுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்க அழைப்பு விடுப்பது உட்பட, செல்வாக்குள்ள சமயத் தலைவர்களால் தூண்டிவிடப்படும் வன்முறை உலகில் அதிகரித்து வருகின்றது என்று ஐ.நா.வின் மூத்த மனித உரிமை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் புனிதப் போர் தொடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு சவுதி அரேபியாவிலுள்ள சுன்னி இஸ்லாம் பிரிவு சமயத் தலைவர்கள் அண்மையில் அழைப்பு விடுத்திருப்பது குறித்த தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.

இனப்படுகொலை தடுப்புக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு ஆலோசகர் Adama Dieng, இனப்படுகொலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான சிறப்பு ஆலோசகர் Jennifer Welsh ஆகிய இரு அதிகாரிகள் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் ஏற்கனவே நிலைமை மிகவும் மோசமாக உள்ளவேளை, சமய நோக்கத்தோடு போராட அழைப்பது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்றும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.     

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.