2015-10-14 16:34:00

உரோம்,வத்திக்கான் இடறல்களுக்கு மன்னிப்பு கேட்டார்


அக்.14,2015. உரோமையிலும், வத்திக்கானிலும் அண்மையில் இடம்பெற்ற இழிவுக்குரிய காரியங்களுக்கு, திருஅவையின் பெயரால் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவத்திற்குக் காரணமாகும் காரியங்களுக்கு ஐயோ கேடு என்று இயேசு கூறும் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து இப்புதனன்று பொது மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தயாரித்து வைத்திருந்த உரையை வழங்குவதற்கு முன்னர், உரோமையிலும், இங்கே வத்திக்கானிலும் அண்மையில் இடம்பெற்ற இழிவுக்குரிய காரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

சிறாருக்கு நாம் அளிக்கும் வாக்குறுதிகள் என்ற தலைப்பில் இப்புதன் பொது மறைக்கல்வியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மேலும், அக்டோபர் 17, வருகின்ற சனிக்கிழமையன்று கடும் வறுமையை அகற்றும் உலக தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் இப்புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்னர் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் தங்களின் அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு இத்தினம் உறுதியளிப்பதாய் அமைய வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.

கடும் வறுமை மற்றும் பாகுபாட்டை ஒழிப்பதற்கென உலகினரின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் கூறிய  திருத்தந்தை, ஒவ்வொருவரும் இந்த நம் நோக்கத்தை நிறைவேற்ற அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.

இதன் வழியாக கிறிஸ்துவின் அன்பு அனைவரையும் ஆட்கொண்டு, மிகவும் ஏழ்மையில் வாழும் மற்றும் கைவிடப்பட்ட நம் சகோதர சகோதரிகளின் துயர் நீக்க உதவு முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.