2015-10-14 17:30:00

அடக்குமுறைகள், உலக அளவில் கிறிஸ்தவத்திற்கு அச்சுறுத்தல்


அக்.14,2015. உலக அளவில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் அடக்குமுறைகள், உலகளாவிய கிறிஸ்தவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று, ACN என்ற துயருறும் திருஅவைக்கு உதவி என்ற கத்தோலிக்க அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி வெளியேறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் கிறிஸ்தவம் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்று அவ்வறிக்கை மேலும்  கூறுகின்றது.

கடந்த இரு ஆண்டுகளில் 19 நாடுகளில் கிறிஸ்தவர்களின் நிலவரம் குறித்து இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்டுள்ள ACN அமைப்பு, இவற்றில் 15 நாடுகளில் கிறிஸ்தவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் முக்கிய காரணமாக இருக்கின்றபோதிலும், பிற சமயத் தீவிரவாதிகள் மற்றும் வட கொரியா போன்ற சர்வாதிகார ஆட்சிகளாலும் கிறிஸ்தவர்கள் குறிவைத்து துன்புறுத்தப்படுகின்றனர்  என்றும் தெரிவித்துள்ளது ACN அமைப்பு.

2014ம் ஆண்டு கோடையில் ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து 1,20,000 கிறிஸ்தவர்களும், போக்கோ ஹராம் தாக்குதலால் 2015ம் ஆண்டு மே மாதம் வரை நைஜீரியாவின் மாய்துகுரி மறைமாவட்டத்திலிருந்து ஒரு இலட்சம் கத்தோலிக்கரும் வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : The guardian / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.