2015-10-13 16:03:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை : பகுதி - 2


உணவு உண்பது என்ற சராசரி குடும்ப நிகழ்வுக்குள்தான் எத்தனை, எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! ஆர, அமர சிந்தித்தால் அது நமக்கு வியப்பைத் தரும். அவ்வப்போது, குடும்பங்களில் நடைபெறும் விருந்துகளையும் இணைத்துச் சிந்தித்தால், இன்னும் பல ஆழமான அர்த்தங்கள் வெளியாகும்.

உணவு, விருந்து என்பன வெறும் உணவு பரிமாற்றம் அல்ல... பக்குவமாய் சமைத்து, பரிமாறப்படும் உணவுக்குப் பின்னணியில், பாசம், மரியாதை, கடமை, உறவுப் பிணைப்புகள் என்று எத்தனையோ பல உணர்வுகள், உண்மைகள் வெளிப்படுகின்றன. அல்லது, வெளிப்படாமல் புதைந்துள்ளன. குடும்ப உறவுகளில் குழப்பம் உருவாகும்போது, அது உணவு நேரத்திலோ, அல்லது, விருந்திலோ கட்டாயம் வெளியாகும்.

 

பழமைக் கலாச்சாரங்கள் உச்சநிலையை அடைந்தபோது, அங்கு நடைபெற்ற விருந்துகளில் அருவருக்கத்தக்கச் செயல்கள் நிகழ்ந்தன. விருந்தினர்கள், வயிறு நிறைய உண்டபின்னரும், மீண்டும் உண்பதற்காக தாங்கள் ஏற்கனவே உண்ட உணவை வலுக்கட்டாயமாக வெளிக்கொணர்ந்தபின், மீண்டும் உணவருந்தினர் என்ற அருவருப்பான விவரங்களைக் காண்கிறோம். தங்கள் செல்வக் கொழிப்பையும், கலாச்சார உயர்வையும் இவர்கள் உலகிற்கு இவ்விதம் பறைசாற்றினர் என்பதை அறியும்போது, மனதில் கலாச்சாரத்தைப் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வரலாற்றில், குறிப்பாக, மன்னர்களின் வரலாற்றில் விருந்து நேரங்களில் விஷம் பரிமாறப்பட்ட கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம். எனவே, உணவு, விருந்து என்ற சொற்களுக்குள் விபரீதங்கள் புதைந்திருப்பதும் மனித அனுபவம்தான்.

இத்தகைய ஆபத்தான, அருவருக்கத்தக்க விருந்துகள் பல்வேறு கலாச்சாரங்களில் நிகழ்ந்தச் சூழலில், இஸ்ரயேல் மக்கள் மத்தியில், உன்னதமான உணர்வுகளை வெளிப்படுத்திய விருந்துகள் விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவிலிய விருந்துகள், மனிதர்களுக்குள் மட்டுமல்ல, இறைவனோடும், விண்ணகத் தூதர்களோடும் உறவை வளர்த்தது என்பதை விவிலியத்தில் ஆங்காங்கே நாம் காண்கிறோம். விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள முதல் விருந்து, (தொடக்க நூல் 18:1-8) இறைவனுக்கும், வானதூதர்களுக்கும் ஆபிரகாம் வழங்கிய விருந்து என்பதை சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தோம்.

நான்கு நற்செய்திகளையும் நாம் புரட்டிப் பார்க்கும்போது, இயேசுவுக்கும், உணவுக்கும் நெருங்கிய உறவு இருப்பது தெரியவரும். இயேசுவைப் பொருத்தவரை, அவர், உணவுப் பரிமாற்றங்களை, வயிற்றுப்பசியைப் போக்கும் தருணங்களாக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அந்நேரங்களில் மக்களின் ஆன்மீகப் பசியையும், அறிவுப் பசியையும் அவர் தீர்த்தார் என்பதைத் தெளிவாகக் காணலாம்.

உணவுப் பரிமாற்றங்களை, உணர்வுப் பரிமாற்றங்களாக, உண்மைப் பரிமாற்றங்களாக இயேசு பயன்படுத்தினார் என்பதைச் சிந்திக்கும்போது, நம் மனம், வள்ளுவரின் குறள்களை எண்ணிப்பார்க்கிறது. பொருட்பாலில் இடம்பெறும் 'அரசியல்' என்ற பகுதியில், 'கேள்வி' என்ற பிரிவில் அவர் கூறியுள்ள பத்துக் குறள்களில் இரண்டு நம் கவனத்தை ஈர்க்கின்றன:

குறள் 412

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவி வழியாக உண்ணக்கூடிய உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும் என்று கருத்தை 412வது குறளிலும்,

குறள் 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர், இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன? என்ற கேள்வியை 420வது குறளிலும் வழங்கியுள்ளார் திருவள்ளுவர்.

உடல் பசியைத் தீர்ப்பதைவிட, அறிவுப் பசியை, கேள்வி ஞானத்தைத் தீர்ப்பதே மனிதப் பிறவிகளின் அடிப்படை குணநலனாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறியதை, இயேசு தன் வாழ்வில் செயல்படுத்தினார். தன்னை நாடி வந்த மக்கள், உணவைத் தேடிவந்தாலும், மனித வாழ்வில் இன்னும் பல உயர்ந்த தேவைகள் உள்ளன என்று அவர் பாடங்கள் புகட்டினார். இயேசுவையும், உணவையும் இணைத்து, நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் இதனைக் காண்கிறோம்.

இயேசு உணவருந்தியதாக, உணவைப் பலுகச்செய்து பரிமாறியதாகக் கூறப்படும் நிகழ்வுகள், நற்செய்திகளில், குறைந்தது 20 முறையாகிலும் தோன்றுகின்றன. நான்கு நற்செய்திகளிலும், லூக்கா நற்செய்தியில், இயேசுவுக்கும், உணவுக்கும் உள்ள தொடர்பு இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுவதையும் நாம் காண்கிறோம். இந்த நற்செய்தியில் மட்டும், 10 நிகழ்வுகள் இயேசுவையும், உணவையும் தொடர்புபடுத்தியுள்ளன.

வரிதண்டுபவரான லேவியின் இல்லத்தில், ஏனைய வரிதண்டுபவர்களுடனும், பாவிகளுடனும் இயேசு உணவருந்தினார் என்பது லூக்கா நற்செய்தி, 5ம் பிரிவில், முதல் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் உயிர்ப்புக்குப்பின், அவர் எம்மாவு சென்ற சீடர்களுடனும், பின்னர் ஏனையச் சீடர்களுடனும் உணவருந்தும் நிகழ்வுகள், ஒன்பது, மற்றும் பத்தாவது நிகழ்வுகளாக, லூக்கா நற்செய்தி, 24ம் பிரிவில் கூறப்பட்டுள்ளன. இந்தப் பத்து நிகழ்வுகளிலும், இயேசுவின் முக்கியமான படிப்பினைகள் பலவற்றை நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார். எடுத்துக்காட்டாக, லேவி வீட்டில் உணவருந்தியபோது, அவர் பாவிகளுடன் உணவருந்துகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு மறுமொழியாக, அவர் சொல்லித்தந்த பாடம் இதுதான்:

லூக்கா 5:32

 “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்”.

பரிசேயர் ஒருவர் வீட்டில் அவர் உணவருந்தியபோது, அழைப்பின்றி அங்கு நுழைந்து, இயேசுவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவியப் பெண்ணை பலரும் கண்டனம் செய்தனர். இயேசு அவருக்கு மன்னிப்பு வழங்கியதோடு, நிறைவாக அன்பு செலுத்துவோர் நிறைவாக மன்னிப்பு பெறுவர் என்ற பாடத்தை, விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சொல்லித் தந்தார். இதை நாம் லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் காண்கிறோம். லூக்கா 7:36-50

இந்தப் பத்து நிகழ்வுகளில் ஒன்றாக, லூக்கா நற்செய்தி, 14ம் பிரிவில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டில் உணவருந்தச் சென்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது. நாம் சிந்திக்கத் துவங்கியுள்ள 'பெரிய விருந்து உவமை'க்கு இந்நிகழ்வே பின்னணியாக அமைந்துள்ளது. லூக்கா நற்செய்தி 14ம் பிரிவின் ஆரம்ப வரிகள், இந்தப் பின்னணியை இவ்வாறு குறிப்பிடுகின்றன:

லூக்கா 14: 1

ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

இவ்வரிகளில், இயேசுவைச் சூழ்ந்திருந்த 4 அம்சங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன: ஒய்வுநாள், பரிசேயர் தலைவர் வீடு, உணவருந்தும் சூழல், கூடியிருந்தோரின் கவனம், என்ற இந்த 4 அம்சங்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, ஓர் இறுக்கமானச் சூழலை உணர்கிறோம். பரிசேயர் தலைவர், இயேசுவை உணவருந்த அழைத்தாரா, அல்லது, உளவு பார்க்க அழைத்தாரா என்ற கேள்வி எழுகிறது. கூடியிருந்தவர்கள் ஏன் இயேசுவைக் கூர்ந்து கவனித்தனர் என்ற கேள்விக்கு, லூக்கா நற்செய்தி 11ம் பிரிவு பதில் தருகிறது.

இந்த விருந்துக்கு முன்னதாக, மற்றொரு பரிசேயர் வீட்டில் இயேசு உணவருந்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வை லூக்கா நற்செய்தி 11ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

லூக்கா 11: 37-38

இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.

வீடுகளில் நுழைவதற்கு முன், பந்தியில் அமர்வதற்கு முன், கழுவும் சடங்குகள் பல இஸ்ரயேல் மக்கள் மத்தியில், குறிப்பாக, பரிசேயர்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, அவர்கள் பயன்படுத்தும் நீர் எவ்வித கலப்பும் அற்ற, சுத்தமான நீராக இருக்கவேண்டும். அந்த நீரை பணியாளர் ஒருவர் விருந்தினர் கைகள் மீது ஊற்றவேண்டும். தானாகவே குழாய்களில் இருந்து வடியும் நீரைப் பயன்படுத்தக்கூடாது என்ற பல நியதிகள் இருந்தன. இவை எதையும் கடைபிடிக்காமல், இயேசு விருந்தில் சென்று அமர்ந்தது, பரிசேயரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இம்முறை இயேசு பரிசேயர் தலைவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது, அவரைப் பற்றிய வதந்திகள் ஏற்கனவே அவருக்கு முன் அங்கு சென்றடைந்திருக்கும். எனவே, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்... சடங்குகளை, நியதிகளை அவர் பின்பற்றுகிறாரா என்பதைக் கவனிக்கக் காத்திருந்தனர்.

அந்நேரத்தில் மற்றொரு சவாலானச் சூழல் இயேசுவுக்கு முன் எழுகிறது. "அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர் முன் இருந்தார்" (லூக்கா 14: 2) என்று லூக்கா குறிப்பிடுகிறார். நோயுற்ற ஒருவரை பரிசேயரின் தலைவர் தன் வீட்டுக்கு அழைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். எனவே, நோயுற்றவர் அங்கு தானாகவே வந்திருக்கவேண்டும். அதாவது, பரிசேயர் தலைவரின் வீட்டுக்கு இயேசு வரும் செய்தி அவ்வூரில் பரவியதால், அவரிடம் குணம்பெறும் ஆவலில் அவர் அங்கு வந்திருக்கவேண்டும். உணவருந்தும் வேளைகளில் உண்மைகளைச் சொல்லித்தருவதை தன் வழக்கமாகக் கொண்ட இறைமகன் இயேசு, இச்சூழலில் எவ்வகைப் பாடங்களைச் சொல்லித்தந்தார் என்பதை நம் அடுத்தத் தேடலில் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.