2015-10-13 12:31:00

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்


அக்.13,2015. இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அம்மறைமாவட்டத்தின் முதன்மைக்குரு அருள்பணி ஜஸ்டின் பெர்னார்டு ஞானப்பிரகாசம் அவர்களை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அவர்களின் பணி ஓய்வை திருஅவை சட்டம் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரை நியமித்துள்ளார். 1981ம் ஆண்டிலிருந்து மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அவர்கள், 1992ம் ஆண்டில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மேய்ப்பராக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜஸ்டின் பெர்னார்டு ஞானப்பிரகாசம் அவர்கள், அம்மறைமாவட்டத்தின் கரம்போனில் 1948ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்தவர். இவர்  கண்டியிலும், பூனாவிலும் மெய்யியல், இறையியல் கல்வியை முடித்து 1974ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

பிரிட்டனின் Southampton பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பையும் முடித்துள்ள இவர், யாழ்ப்பாணம் புனித பாட்ரிக் கல்லூரியின் அதிபராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்பவராகவும் பணியாற்றியுள்ளார்.

2007ம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகவும்  பணியாற்றி வந்த 67 வயது நிரம்பிய புதிய ஆயர் ஜஸ்டின் பெர்னார்டு ஞானப்பிரகாசம் அவர்கள், 2008ம் ஆண்டு முதல் யாழ்ப்பாண கத்தோலிக்க அச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

1886ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஏறக்குறைய 15 இலட்சம் மக்களில் 2,47,315 பேர் கத்தோலிக்கர். 4,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இம்மறைமாவட்டத்தின் 59 பங்குகளில் 62 துறவற அருள்பணியாளர் உட்பட 162 அருள்பணியாளர்களும், 97 அருள்சகோதரர்களும், 230 அருள்சகோதரிகளும், 31 குருத்துவ மாணவர்களும் மறைப்பணியாற்றுகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.