2015-10-13 16:02:00

பல்சமய திருமண வாழ்வு சிறப்பாக அமைய முடியும்


அக்.13,2015. வெவ்வேறு மதத்தவர் இணைந்து வாழும் திருமண வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமைய முடியும் என்று, குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் இந்தியத் தம்பதியர் பகிர்ந்து கொண்டனர்.

38 ஆண்டுகளுக்கு மேலாக திருமண வாழ்வில் இணைந்திருக்கும் மும்பையைச் சேர்ந்த தம்பதியர் Ishwarlal Bajaj, Penelope உட்பட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 தம்பதியர் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்கின்றனர். இத்திங்களன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்த இந்தியத் தம்பதியரும், பிரேசில் தம்பதியரும் கலந்துகொண்டு தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மாமன்றத்தின் ஆறாவது பொது அமர்வில் பகிர்ந்து கொண்ட Penelope அவர்கள், தனது கணவர் Ishwarlal Bajaj அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தங்கள் இருவரின் கல்வி மற்றும் சமூகப் பின்னணி ஒரே மாதிரியானது என்றும், பல சோதனைகள் மற்றும் துன்பங்கள் மத்தியில் தங்களின் வாழ்வு நல்லிணக்கத்தோடு சென்று கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

கணவரின் சகிப்புத்தன்மையும், கிறிஸ்தவத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பும், இன்னும், தனது அன்பும், புரிந்துகொள்தலும் குடும்ப வாழ்வுக்கு உதவுகின்றது, ஒவ்வொரு நாளும் திருமணம் பற்றி மேலும் கற்று, புரிதலுடன் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினார் Penelope.

இத்தம்பதியரின் வெள்ளி விழா நாளில் Ishwarlal Bajaj அவர்கள் கத்தோலிக்கத்தைத் தழுவியுள்ளார். இவர்களின் மகன் 28வது வயதிலும், மகள் 32வது வயதிலும் கத்தோலிக்கத்தைத் தழுவியுள்ளனர்.

Bajaj அவர்களின் தந்தை பொறியியலாளர், தாய் மருத்துவர். Penelope அவர்களின் தாய் ஒரு பள்ளியின் முதல்வர். தந்தை மருத்துவர் மற்றும் இந்திய இராணுவத்தில் அதிகாரி.

இம்மாதம் 25ம் தேதி நிறைவடையும் இவ்வுலக மாமன்றத் தந்தையர் தற்போது சிறு குழுக்களாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.