2015-10-13 16:21:00

ஒரு சிறுமிக்கு வழங்கும் கல்வி, ஒரு நாட்டிற்கே வழங்குவதாகும்


அக்.13,2015. பாலின வேறுபாடின்றி எல்லாருக்கும் கல்வி வழங்கும் முயற்சியில் உலகில் பாதிக்கும் குறைவான நாடுகளே வெற்றி பெற்றுள்ளன என்று யுனெஸ்கோ நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

“பாலினம் மற்றும் அனைவருக்கும் கல்வி” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவன பொது இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், ஒரு சிறுமிக்கு கல்வி வழங்குவது, ஒரு நாட்டிற்கே கல்வி வழங்குவதற்குச் சமம் என்றும், சிறுமிகளுக்குக் கல்வி வழங்குவது சிறந்ததோர் உலகு உருவாக உதவும்  

என்றும் கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளில் பாலின வேறுபாடின்றி உலகில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்ட நிலையை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறுவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பள்ளிக்குச் செல்லாத சிறுமிகள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

6 கோடியே 20 இலட்சம் சிறுமிகள் கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமையை இழந்திருக்கின்றபோதிலும், கடந்த 15 ஆண்டுகளில் பள்ளிக்குச் செல்லாத சிறுமிகளின் எண்ணிக்கை 5 கோடியே 20 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி, உலக பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.