2015-10-12 15:34:00

கடுகு சிறுத்தாலும் – பிரார்த்தனையில் எது முக்கியம்?


ஒருமுறை குருநானக் அவர்கள் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே பலர் முழங்காலிட்டுச் செபித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் இறைவனின் பெயரைச் சப்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த குருநானக் புன்முறுவல் பூக்கத் தொடங்கினார். செபித்தவருக்கோ கோபம். இந்த வெளிவேடக்காரரைப் பாருங்கள் என்று கத்தினார். பின்னர், நீ ஏன் சிரிக்கிறாய்? என்று அந்த மனிதர் கேட்க, நீ செய்வது பிரார்த்தனை அல்ல, அதனால்தான் சிரிக்கிறேன் என்று பதில் சொன்னார் குருநானக். பின்னர் குருநானக் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார். நீதிபதி குருநானக்கிடம், சிரித்ததற்கான காரணத்தைக் கேட்டார். அவர் செய்தது பிரார்த்தனை அல்ல, அதனால்தான் சிரித்தேன் என்று பதில் சொன்னார் குருநானக். அப்படியானால் அவர் என்ன செய்தார்? என்று நீதிபதி கேட்க, அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள், அவர் என்ன செய்தார் என்பதை அப்போது சொல்லுகிறேன் என்றார் குருநானக். அந்த மனிதரும் அழைத்து வரப்பட்டார். உடனே குருநானக் அவரிடம், நீர் இறைவன் பெயரைக் கூவியபோது, வீட்டில் விட்டு வந்த கோழிகளை நினைத்தீரா? இல்லையா? சத்தியம் செய்யுங்கள் என்றார். அந்த மனிதர் சற்று நேர்மையானவர். அதனால் உண்மையை ஒத்துக்கொண்டார். ஆனந்தமயமான இறைவனை நினைக்கும்போது கோழிகளை நினைக்காதீர்கள் என்று அறிவுரையும் சொன்னார் குருநானக்.

எத்தனை மணிநேரம் பிரார்த்தனை என்பதைவிட எத்தனை மணித்துளிகள் பிரார்த்தனை என்பதே முக்கியம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.