2015-10-12 16:39:00

உலக அமைதிக்காக பத்து இலட்சம் சிறார் செபமாலை


அக்.12,2015. உலகின் அமைதிக்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 இலட்சம் குழந்தைகள், வரும் ஞாயிறன்று அவரவர் இடங்களில் கூடிச் செபிக்க உள்ளனர் என 'துயருறும் திருஅவைகளுக்கு உதவி' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

'10 இலட்சம் குழந்தைகளின் செபம்' என்ற தலைப்பில் 2005ம் ஆண்டு வெனெசுவேலாவின் கரகாஸ் நகரில் துவக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவரும் இந்த 'செபமாலை செபிக்கும் நாள்' இந்த ஆண்டும் உலகின் பல பகுதிகளில் குழந்தைகளுடன், 'துயருறும் திருஅவைகளுக்கு உதவி' என்ற அமைப்பினால் நடத்தப்பட உள்ளது.

நான்கு கண்டங்களில் 21 தேசிய மையங்கள் மூலம் பணியாற்றிவரும் இந்த அமைப்பு, '10 இலட்சம் குழந்தைகள் ஒன்றிணைந்து செபமாலையைச் செபித்தால், உலகில் மாற்றம் நிகழும்' என்ற புனித பாதரே பியோ அவர்களின் வார்த்தைகளின் அடிப்படையில் இந்தச் செப நாளை உருவாக்கியது.

உலகின் குழந்தைகள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் செபிப்பதற்கும் உதவும் நோக்கில் 1979ம் ஆண்டு முதல் இன்றுவரை 178 மொழிகளில் 5 கோடியே 10 இலட்சம் பாலர் விவிலியப் பிரதிகளை அச்சிட்டு விநியோகித்துள்ளது 'துயருறும் திருவைகளுக்கு உதவி' அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.