2015-10-12 16:07:00

இளையோரே, இயேசு அளிக்கும் மகிழ்வை விரும்புகிறீர்களா?


அக்.12,2015. இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரை இயேசு சந்தித்து பற்றி விளக்கும் மாற்கு நற்செய்திப் பகுதி(மாற்.10:17-30) பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

இயேசு அச்செல்வந்தரை கூர்ந்து நோக்கியது, அன்பொழுக நோக்கியது, பாசத்துடன் பார்த்தது ஆகிய இயேசுவின் மூன்று பார்வைகளை மையமாக வைத்து இந்நற்செய்திப் பகுதி உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு இச்செல்வந்தரின் குறையுள்ள பகுதியை உணர்ந்து, அச்செல்வந்தர் ஆற்ற வேண்டிய தெளிவான பரிந்துரைகளை முன்வைத்தார் என்று கூறினார்.

அச்செல்வந்தரின் இதயம் இறைவனுக்கும் பணத்திற்கும் இடையே சிக்கியிருந்ததால் அவர் முகம் வாடி வருத்தத்தோடு சென்றார் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசமும், பணத்தின் மீதான பற்றும் ஒன்றுசேர்ந்து வாழ இயலாது என்றும் கூறினார். 

நித்திய வாழ்வு என்பது, வெறும் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னான வாழ்வைக் குறிப்பதல்ல, ஆனால், எவ்வித வரையறையும் இன்றி முழுமையாக நிறைவேற்றப்படும் வாழ்வு பற்றியதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, பணம், இவ்வுலக இன்பம், வெற்றி ஆகியவை நிலைத்து நிற்கமாட்டா என்றும் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இளையோரிடம், இயேசுவின் பார்வை உங்கள்மீது படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் எவ்விதம் பதிலளிக்க விரும்புகிறீர்கள்? இயேசு அளிக்கும் மகிழ்வோடு இந்த வளாகத்தை விட்டுச் செல்வதை விரும்புகிறீர்களா? அல்லது இந்த உலகம் வழங்கும் வருத்தமான இதயத்தோடு செல்ல விரும்புகிறீர்களா? என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.