2015-10-10 15:35:00

இன்னல்களுக்கிடையில் விசுவாசத்தில் வேரூன்றிய குடும்பங்கள்


அக்.10,2015. திருஅவையின் கோட்பாடுகளை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் எதுவும் அறிவிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்று மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் கூறினார்.

14வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விவரித்த கர்தினால் தாக்லே அவர்கள், போர்கள், குடியேற்றம் மற்றும் துன்பங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு திருஅவையின் கோட்பாடுகள் எவ்வாறு ஆதரவளித்து உதவும் என்பது குறித்த செய்திகளை எல்லாரும் எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

குடும்பங்களின் மேய்ப்புப்பணியில் திருஅவையின் கோட்பாடுகளை செயல்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கப்படுகின்றது என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இன்றையக் குடும்பங்கள் பல எதிர்மறைச் சக்திகளுக்கு உள்ளாகின்றன, ஆயினும், குடும்பங்கள், சுடர்விடும் எடுத்துக்காட்டுகளாக பல வழிகளில் விளங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இவ்வெள்ளி காலை பொது அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்ட 13 சிறிய குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார் கர்தினால் தாக்லே.

இம்மான்றத்தில் விவாதிக்கப்படுவதற்கென தயாரிக்கப்பட்ட தொகுப்பு, பெரும்பாலும் இன்றைய குடும்பம் குறித்த எதிர்மறை கண்ணோட்டத்தையே தருகின்றது என்பது பலரின் கருத்து, பிரச்சனைகளும், இன்னல்களும் எல்லா இடங்களிலும் உள்ளன, இருந்தபோதிலும், கிறிஸ்துவிலும், விசுவாசத்திலும் மகிழ்வோடு ஆழமாக வேரூன்றிய குடும்பங்கள் உலகெங்கும் உள்ளன என்பதை ப்ரெஞ்ச் குழுக்களில் ஒன்று கூறியது என்பதும் பத்திரிகையாளர் கூட்டத்தில் சொல்லப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.