2015-10-09 16:29:00

மத்தியகிழக்கில் ஒப்புரவு, அமைதி ஏற்பட திருத்தந்தை அழைப்பு


அக்.09,2015. மத்திய கிழக்கிலும் ஆப்ரிக்காவிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட செபிக்குமாறு இவ்வெள்ளி காலையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த மூன்று நாள்களாக(அக்.6 முதல் 8 வரை), 13 சிறிய குழுக்களாக, விவாதங்களில் ஈடுபட்டிருந்த உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், இவ்வெள்ளி காலையில் மீண்டும் பொது அமர்வுக்குக் கூடினர். இந்தப் பொது அமர்வு திருப்புகழ் மாலை செபத்துடன் ஆரம்பமானது.

மத்திய கிழக்கிலும் ஆப்ரிக்காவிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட இச்செபத்தை அர்ப்பணிப்போம் என்று மாமன்றத் தந்தையரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்நாள்களில், சிரியா, ஈராக், எருசலேம் மற்றும் ஜோர்தான் ஆற்றின் மேற்கு கரைப் பகுதிகளில் வன்முறைகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை தருகின்றது என்று கூறினார்.

அனைத்துலகச் சட்டம் மற்றும் தூதரக உறவுகளைக் கருவியாகப் பயன்படுத்தி, தற்போது இடம்பெற்றுவரும் போர்களுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்குமாறு அனைத்துலக சமுதாயத்தை, இம்மாமன்றத் தந்தையருடன் இணைந்து தனது இதயத்தின் ஆழத்திலிருந்து விண்ணப்பிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த வன்முறைகள், அப்பாவி மக்களைப் பலிவாங்கி, அளப்பரிய மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குகின்றன என்றும், போர் அழிவைக் கொணர்ந்து, மக்களின் துன்பங்களைப் பெருக்குகின்றன என்றும், அமைதிக்கான வழிகளைத் தேர்ந்து கொள்வதன் வழியாகவே, நம்பிக்கையும், முன்னேற்றமும் ஏற்படும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆப்ரிக்கக் கண்டத்தில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட செபிப்போம் என்றும் இவ்வெள்ளி காலையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.