2015-10-09 16:35:00

மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களை மேற்குலகம் மறக்கக் கூடாது


அக்.09,2015. வத்திக்கானில் குடும்பம் குறித்து நடைபெற்றுவரும் 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய சிரியா கத்தோலிக்க முதுபெரும் தந்தை Ignatius Youssef III Younan அவர்கள், மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்களை மேற்குலகம் மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான மக்கள் பிணையல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், இத்தகைய கொடூரச் சூழல்களுக்கு மத்தியில், அப்பகுதிகளிலே தொடர்ந்து வாழ வேண்டுமென்று இளைய தலைமுறைகளை எங்களால் கேட்க முடியவில்லை என்றும் முதுபெரும் தந்தை Younan அவர்கள் கூறினார். சிரியாவிலும், ஈராக்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றனர் என்றும் கூறினார் முதுபெரும் தந்தை Younan.

மேலும், இப்பத்திரிகையாளர் கூட்டத்தில், முதுபெரும் தந்தை Younan அவர்களுடன், கர்தினால் Edoardo Menichelli, ஆப்ரிக்காவின் கானா நாட்டுப் பேராயர் Gabriel Charles Palmer-Buckle ஆகிய இருவரும், இம்மாமன்றத்தின் 13 சிறிய குழுக்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பற்றியும் பகிர்நது கொண்டனர்.

குடும்பம் மற்றும் திருஅவையின் நலன் பற்றி நாங்கள் உணருவது என்ன என்பதைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு உள்ளோம் என்று கூறினார் பேராயர் Palmer-Buckle.  

ஆப்ரிக்காவில் கூட்டுக் குடும்பம் பற்றிய கருத்தியல் இருக்கின்றது, இந்தக் கூட்டுக் குடும்பங்களின் விழுமியங்களும் மகிழ்வும், எவ்வளவு தூரம் ஆழமாக உயிரோட்டம் பெற்றுள்ளன என்பதைப் பார்க்க விரும்புகிறோம், ஏனெனில், குடும்பங்களின் எதிர்காலம் திருஅவையின் மறைப்பணியாக உள்ளது என்று கூறினார் பேராயர் Palmer-Buckle .

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி அறிவதற்கு, சீன மொழி உட்பட பல்வேறு மொழிகளில் இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று இப்பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.