2015-10-09 16:52:00

புலம்பெயர்வோர்க்கு மனிதாபிமான புகலிட நிறுவனம் தேவை


அக்.09,2015. உலகில் போர் மற்றும் அடக்குமுறைகளுக்கு அஞ்சி வெளியேறும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வரும்வேளை, இம்மக்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் சாராத, மனிதாபிமான அடிப்படையிலான புகலிட நிறுவனம் அமைக்கப்படுமாறு கேட்டுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.

ஐ.நா.வின் UNHCR புலம்பெயர்வோர் நிறுவனத்தின் செயல்திட்ட ஆண்டுக் கூட்டத்தில் இவ்வியாழனன்று ஜெனீவாவில் உரையாற்றிய, புலம்பெயர்வோர் பாதுகாப்பிற்கான உதவி இயக்குனர் Volker Türk அவர்கள், 6 கோடிப் பேர் கட்டாயமாக வெளியேறி மிகவும் துன்பம் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர் என்று விளக்கினார்.

இம்மக்கள் நுழைவதைத் தடுப்பதற்கென, சில நாடுகளில் வேலிகளும், சுவர்களும் அமைக்கப்படுகின்றன, எல்லைகளில் காத்திருக்கும் இம்மக்கள் அண்டை நாடுகளுக்குச் செல்வதற்காக அச்சமூட்டும் காரியங்கள் நடத்தப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் Türk.

புலம்பெயரும் மக்கள் செல்லும் நாடுகள் மட்டும் தனித்து நின்று அம்மக்களின் நெருக்கடிகளைக் களைய முடியாது என்று, 1951ம் ஆண்டின் புலம்பெயர்வோர் குறித்த உலக ஒப்பந்தம் கூறுவதையும் குறிப்பிட்டுப் பேசினார் Volker Türk. 

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.