2015-10-09 16:59:00

துனிசியா தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு நொபெல் அமைதி விருது


அக்.09,2015. 2015ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருது, The National Dialogue Quartet என்று அழைக்கப்படும் துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டு ஆஸ்லோவில் இவ்வெள்ளியன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட நொபெல் அமைதி விருது தேர்வுக் குழு, துனிசியாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு நாட்டில் சனநாயகத்தை ஏற்படுத்த இக்குழு உழைத்ததைக் கவுரவிக்கும் நோக்கத்தில்  இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட The Quartet என்ற தேசிய பேச்சுவார்த்தை கூட்டமைப்பில்(UGTT), துனிசியா நாட்டு தொழிற்சங்கம், தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் கைவினைப்பொருள்களின் கூட்டமைப்பு, துனிசிய மனித உரிமைகள் கழகம், வழக்கறிஞர்கள் அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகள் உள்ளன. Choukri Belaid, Mohammad Ibrahim ஆகிய இரு அரசு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதையடுத்து துனிசியாவில் உருவான இக்கட்டான அரசியல் சூழலிலிருந்து நாட்டை மீட்டு வருவதற்கு இக்கூட்டமைப்பு கடுமையாக உழைத்தது. இந்த அமைப்புகளின் சீரிய நடவடிக்கையின் காரணமாகவே, துனிசியாவில் சனநாயகம் தழைத்தது என்று சொல்லப்பட்டுள்ளது.

இவ்விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த துனிசியாவின் பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர் அருள்பணி Jawad Alamat அவர்கள், இவ்விருது, துனிசியாவின் சனநாயகத்தை அங்கீகரித்து அதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்று கூறினார். பயங்கரவாதம் மற்றும் வறுமைக்கு எதிராகப் போராடும் இன்னல் நிறைந்த சூழலில் துனிசியா மக்கள் வாழ்ந்து வருகின்றனர், இந்த அமைதி விருது இந்நாட்டினரை மதிப்பதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது என்றும் அருள்பணி Jawad Alamat தெரிவித்தார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.