2015-10-09 16:57:00

சிறுபான்மையினர்க்கெதிரான மசோதா திரும்பப் பெற வலியுறுத்தல்


அக்.09,2015. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுபான்மை மதத்தவர் மற்றும் தொழிலாளருக்கு ஓட்டுரிமையை மறுக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் போராடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநில சட்டசபைக்கு முன்பாக நின்று கொண்டு, வெட்கம், கொலைகள், சிறுபான்மையினர் என்று சொல்லிப் போராடி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இம்மாதம் 30ம் தேதி இடம்பெறவுள்ள உள்ளூர் தேர்தல்களில் தங்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் இம்மசோதாவை இரத்து செய்யுமாறு கூறி வருகின்றனர்.

கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் ஆயர்களின் முயற்சியினால் இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தில், இத்தலைவர்கள் வாகனங்களில் நின்றுகொண்டு மாநில அரசின் இம்மசோதாவுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

வாகனத்தில் நின்றுகொண்டு பேசிய லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள், எங்களைப் பிணையக் கைதிகளாக எடுத்துச் செல்லாதீர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் நடவடிக்கைகளை மாற்ற வேண்டும், பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அடையாளத்தை நாங்கள் கேட்கிறோம் என்று உரக்கச் சொன்னார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.